மேலும் அறிய
தருமபுரி: கத்திரிக்காய் வரத்து குறைவால் விலை அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி
இங்கு விளையும் கத்திரிக்காய் ஓசூர், பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கத்திரிக்காய்
தருமபுரி மாவட்டத்தில் கத்திரிக்காய் வரத்து குறைவால், விலை அதிகரிப்பு-கிலோ ரூ.40-க்கு விற்பனையாவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம், மாரண்டஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் சுமார் 300 ஏக்கரில் கத்திரிக்காய் பயிரிட்டு வருகின்றனர். இங்கு விளையும் கத்திரிக்காய் ஓசூர், பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. தருமபுரி மாவட்டத்திலிருந்து கத்திரிக்காய் வெளியூருக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக உள்ளூர் மார்கெட்டுக்கு வரத்து சரிய தொடங்கியது.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதமாக தொடர் பருவமழை காரணமாக, தருமபுரி மாவட்டத்தில் கத்திரக்காய் விளைச்சல் அதிகரித்து, உள்ளூர் மார்க்கெட்டிற்கு அதிகமாக இருந்தது. இதனையடுத்து கத்திரிக்காய் விலை குறைந்து ரூ.10 வரை விற்பனையானது. ஆனால் தற்போது கத்திரிக்காய் விளைச்சல் அதிகரித்தாலும், வெளியூருக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் கத்திரிக்காய் விலை படிப்படியாக அதிகரித்தது. கடந்த சில வாரங்களுக்கு முன் கிலோ ரூ.30-க்கு விற்பனையான நிலையில், மீண்டும் விலை உயர்ந்து, கிலோ ரூ.35-முதல் 40-க்கு விற்பனையாகிறது. இந்த நிலையில் வெளி மார்க்கெட்டில் கத்திரிக்காய் ரூ.40 வரை விற்பனையாகிறது. மேலும் கத்திரிக்காய் விலை உயர்ந்துள்ளதாலும், கடந்த ஒரு மாதத்திற்கு மேல் கத்திரிக்காய்க்கு நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அரூர் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் உயிரிழப்பு- காவல் துறை விசாரணை.
தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையத்தில் வயது முதிர்ந்தவர்கள் யாசகம் பெற்று பேருந்து நிலையத்திலேயே தங்கி வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக அங்கும், இங்குமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்த ஒரு முதியவர், மூன்று நாட்களாக பேருந்து நிலையத்திலேயே தங்கி வந்துள்ளார். இந்த முதியவரால் முடியாத நிலையில் இருந்து வந்துள்ளார். இவருக்கு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உணவு வழங்கி வந்துள்ளனர். இங்கு பேருந்து நிலையத்தில் திருடு, வழிப்பறி, உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட புற காவல் நிலையம் முன்பு இந்த முதியவர் உறங்கிக் கொண்டிருந்தார். ஆனால் பொழுது விடிந்து நீண்ட நேரம் ஆகியும், முதியவர் அசைவின்றி படுத்து கிடந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அருகே இருந்த பொதுமக்கள் அருகே சென்று பார்த்த போது உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பேருந்து நிலையத்திற்கு வந்த காவல் துறையினர் முதியவர் உடலை மீட்டு, அடையாளம் தெரியாத இந்த முதியவர் குறித்து அரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















