மேலும் அறிய
Advertisement
Dharmapuri: தினமும் 4 கி.மீ நடந்து பள்ளிக்கு செல்லும் 4 கிராம மாணவர்கள் - நேரத்திற்கு பேருந்து இயக்க கோரிக்கை
ஆர்.கோபிநாதம்பட்டியிலிருந்து செல்லும் சாலையில் உள்ள மின் கம்பங்களில் சரியான மின்விளக்கு வசதிகள் கூட இல்லை. ஒரு சில கம்பங்களில் மட்டும் மின் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.
மொரப்பூர் அருகே பேருந்து வசதியில்லாததால் 4 கிராம மாணவ, மாணவியர்கள் தினமும் 4 கி.மீ நடந்து பள்ளிக்கு செல்கின்றனர். இதனால் பள்ளி நேரத்திற்கு அரசுப் பேருந்து இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட போளையம்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள மாரப்ப நாயக்கன்பட்டி, போளையம்பள்ளி, பொம்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து தருமபுரி, கோபிநாதம்பட்டி உள்ளிட்ட வெளியூருக்கு படிக்க 100-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சென்று வருகின்றனர். மேலும் கிராமங்களில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் இந்த கிராமங்களுக்கு போதிய பேருந்து வசதியில்லை. இந்த கிராமங்களின் வழியாக ஒரு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. ஆனால் மதிய நேரத்தில் பேருந்து வருவதால், யாருக்கும் பயனில்லாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த 4 கிராமத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் காலை நேரங்களில் சரியான போக்குவரத்து வசதி இல்லாததால், சுமார் 4 முதல் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக நடந்து சென்று கோபிநாதம்பட்டி சென்று அங்கிருந்து பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கும் செல்கின்றனர். அதேபோல் வேலைகளுக்கு செல்லும் கிராம மக்களும் நடந்து செல்கின்றனர். மாலை நேரங்களில் மாணவர்கள் பள்ளி முடிந்து நடந்து செல்வதால் சோர்வடைந்து விடுகின்றனர். இதனால் படிக்க முடியாத சூழல் இருந்து வருகிறது. மேலும் பள்ளி முடிந்து, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு இருந்தால், வகுப்பு முடிந்து வருவதற்குள் இருள் சூழ்ந்து விடுகிறது. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர்.
மேலும், ஆர்.கோபிநாதம்பட்டியிலிருந்து செல்லும் சாலையில் உள்ள மின் கம்பங்களில் சரியான மின்விளக்கு வசதிகள் கூட இல்லை. ஒரு சில கம்பங்களில் மட்டும் மின் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் நடந்து வரும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்து வருகிறது. எனவே மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், போளையம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மக்களின் நலன் கருதி காலை 8 மணி மற்றும் மாலை 5 மணி அளவில் நவலை, சின்னா கவுண்டம்பட்டி, பொம்பட்டி போளையம் பள்ளி, மாரப்பன் நாயக்கன்பட்டி மற்றும் ஆர் கோபிநாதம்பட்டி வழியாக தருமபுரி செல்லும் வகையில் அரசு நகரப் பேருந்து வசதியை செய்து தர வேண்டும். மேலும் ஆர்.கோபிநாதம்பட்டியிலிருந்து செல்லும் சாலையில் போதிய மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என பொதுமக்கள், மாணவ, மாணவிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் கேட்டபோது, ”ஆர் கோபிநாதம்பட்டி பகுதியில் மாணவ, மாணவிகள் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்கு பொருத்த அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து, மின்விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக விரைவில் பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
திருவண்ணாமலை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion