மேலும் அறிய
அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் தங்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள் - அருந்ததியர் மக்கள் வேதனை
விளிம்பு நிலையில் இருப்பதால் தங்களை அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் தங்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய வருவதாக கூறி, இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மனு அளித்த மக்கள்
தருமபுரி மாவட்டத்தில் அருந்ததியர் சமூக மக்களுக்கு கொடுக்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்களை அளவீடு செய்து, வீடு கட்டி தர வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் மனு அளித்தனர். கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் பெரிய போராட்டம் நடப்படும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் ஜடையம்பட்டி, ஆட்டுக்காரன்பட்டி, கோயிலூரான் கொட்டாய், மிட்டா தின்ன அள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் அருந்ததியர் சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 25 ஆண்டுகள் கடந்தும், இந்த வீட்டுமனை வழங்கப்பட்ட இடங்களை தனித்தனியாக அளவீடு செய்து கொடுக்காமல் வருவாய்த் துறையினர் காலதாமதம் செய்து வந்துள்ளனர். இதில் ஜடையம்பட்டியில் 1996 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதே போல் ஆட்டுக்காரப்பட்டியில் 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாவட்ட நிர்வாகம் தனிநபர் ஆக்கிரமிப்புகளாக அகற்றி அளவீடு செய்து கொடுக்காமல் இருந்து வந்துள்ளது.

மேலும் பாலக்கோடு அடுத்த கோவிலூரான் கொட்டாய் அருகே நான்குவழி சாலைக்காக சுங்கச் சாவடியை அமைக்க அருந்ததியர் சமூக மக்களின் வீடுகளை கையகப்படுத்தி உள்ளனர். அதற்கு போதிய இழப்பீடு வழங்கவில்லை என்றும், வேறு இடங்களில் மாற்றுப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அப்பொழுது இதனை அடுத்து மனு கொடுக்க வந்த 50-க்கும் மேற்பட்ட மக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி சந்தித்து பேசினார். அப்பொழுது ஆட்டுக்காரன்பட்டியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி இடத்தை அளவீடு செய்து கொடுப்பதாகவும், ஜடையம்பட்டி இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய இடத்தை வெள்ளிக்கிழமை தானே வந்து ஆய்வு செய்து உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.
மேலும் பாலக்கோடு அருகே கோவிலூரான்கொட்டாய் கிராமத்தில் அருந்ததிர் மக்களின் இடங்களை சுங்கச்சாவடி அமைக்க எடுத்துக் கொண்ட விவகாரத்தில், கூடுதலாக இழப்பீடு வழங்குவதற்கு ஆவண செய்து கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வேறு இடங்களில் பட்டா வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதி அளித்துள்ளார். ஆனால் உறுதி அளித்தபடி மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கும் வராமல் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் இன்று மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர் வந்திருந்தனர். விளிம்பு நிலையில் இருப்பதால் தங்களை அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் தங்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய வருவதாக கூறி, இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















