"வடஇந்தியாவை விட தென்னிந்தியாவில் ராணுவப் பயிற்சிக் கல்லூரிகள் குறைவாக உள்ளது" - தேசிய மாணவர் படை துணை தலைமை இயக்குநர்
தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ராணுவத்தில் அதிகளவில் சேரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தேசிய மாணவர் படையின் துணைத் தலைமை இயக்குநர் கமோடர் அதுல்குமார் ரஸ்தோகி தெரிவித்துள்ளார்.
சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் தேசிய மாணவர் படையினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலத்தில் உள்ள சோனா பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் புதுச்சேரி மண்டல தேசிய மாணவர் படையின் துணைத் தலைமை இயக்குநர் கமோடர் அதுல் குமார் ரஸ்தோகி கலந்து கொண்டு பேசினார். ராணுவத்தில் அலுவலர் நிலையில் சேர்ந்து பணியாற்றுவதற்கான தேர்வினை வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்து மாணவர்களுக்கு அவர் பயிற்சியளித்தார்.
இதனையடுத்து தேசிய மாணவர் படையின் துணைத் தலைமை இயக்குநர் கமோடர் அதுல் குமார் ரஸ்தோகி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிகோபரில் தற்போது தேசிய மாணவர் படையில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் உள்ளனர். 15,100 கல்வி நிறுவனங்களில் அவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் 400 கல்வி நிறுவனங்கள் தேசிய மாணவர் படையை தங்களது பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடங்குவதற்கான அனுமதிக்காக காத்திருக்கின்றன. ஒரு அதிகாரிக்கு ஆயிரம் பேர் வீதம் தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. 100 அதிகாரிகள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பயிற்சியளித்து வருகின்றனர். கூடுதலாக மாணவர்களை சேர்க்க வேண்டுமெனில் அதற்கான உள்கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டியுள்ளது. இதற்கு மாநில அரசு தான் உரிய அளவில் இடங்களை வழங்க வேண்டும். அரசிடம் நாங்கள் கேட்டுள்ளோம். ஆனால் நகரப்பகுதியில் பயிற்சிக்கான இடம் பெரிய அளவில் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.
வட இந்தியாவை விட தென் இந்தியாவில் ராணுவப் பயிற்சிக் கல்லூரிகள் குறைவாக உள்ளது. இதனால் ராணுவத்தில் சேர்ந்து பயில்வதற்கான ஆர்வமும் குறைவாக உள்ளது. தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களது மாநிலத்திலேயே பணிபுரிய வேண்டும் என்று நினைப்பதும் ஒரு காரணமாக உள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் தேசிய மாணவர் படை மாணவர்கள் ராணுவத்தில் அலுவலர் நிலையில் பணியில் சேர்வதற்கான தேர்வினை வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்து பயிற்சியளித்து வருகிறோம். இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை சந்தித்து பேசியுள்ளோம். இதனையடுத்து ராணுவத்தில் அலுவலர் நிலை தேர்வினை எழுத அதிகம் பேர் முன்வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் சேலம் சோனா பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில் குமார், குரூப் கமாண்டர் சிவா ராவ் ஆகியோர் உடன் இருந்தனர்.