மாட்டு கோமியம் விவகாரம்... தமிழிசை மீது மருத்துவர் புகார்
துல்லியமற்ற தகவல்களை பரப்புவதன் மூலம் சமுதாயத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், மக்களின் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் என மருத்துவர் புகார்.

சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, பொங்கல் விழாவில் மாட்டு கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மாட்டு கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதற்கான அறிவியல்பூர்வ ஆதாரம் உள்ளது. பண்டிகையின்போது நான் பஞ்சகவ்யம் உண்பது வழக்கம். பஞ்சகவ்யத்தில் மருத்துவ குணங்கள் உள்ளது என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. கோமியம் தொடர்பாக சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். கோமியத்தை குடித்தால் உடல்நல பாதிப்பு ஏற்படும் என வெளிவந்துள்ள ஆராய்ச்சி குறித்து நான் படிக்கவில்லை என்றும் ஐஐடி இயக்குனர் தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு மற்றும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜக மூத்த தலைவரும், மருத்துவருமான தமிழிசை சௌந்தரராஜன், பசு கோமியம் குடிப்பதால் நன்மைகள் ஏற்படும் என்றும், மாட்டு இறைச்சியை சாப்பிடுபவர்கள் மாட்டின் கோமியத்தை மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். மேலும், வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலந்தாள் அது உங்களுக்கு குற்றமில்லை, கோமியத்தை மருந்து என்று சொன்னால் எதிர்ப்பீர்கள் என்றும் கூறினார்.
இதுகுறித்து சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மருத்துவர் சுகுமார் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், சமூகத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் மருத்துவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பசு கோமியம் குறித்து விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படாத உண்மைக்கு மாறான தகவல்களை கூறியுள்ளார். கோமியத்தில் பல்வேறு பாக்டீரியாக்கள் உள்ளதால் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது போன்ற துல்லியமற்ற தகவல்களை பரப்புவதன் மூலம் சமுதாயத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், மக்களின் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும்.
பொதுமக்களின் ஆரோக்கியம் குறித்து எந்த அக்கறையும் இன்றி, இது போன்ற தகவல்களை பரப்புவதன் மூலம் கடும் பின் விளைவுகள் ஏற்படுத்தும் என்பதால், மருத்துவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது புகார் மீது உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மருத்துவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சமூகத்தில் உயர் பொறுப்பில் உள்ளதால் அவர் கூறுவதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலை உள்ளதாகவும். உடனடியாக மருத்துவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதை திரும்பப் பெற வேண்டும் என மருத்துவர் சுகுமார் கேட்டுக்கொண்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

