குழந்தையை விற்று கடனை அடைக்க மிரட்டும் கந்துவட்டி கும்பல் - சேலம் கலெக்டரிடம் கதறிய பெற்றோர்
இரண்டு லட்சம் ரூபாய் கடனுக்காக 5 லட்சம் வரை பணம் செலுத்தி விட்டோம். இருப்பினும் கடன் அடையவில்லை எனக் கூறி வீட்டின் முன்பு நின்று ஆபாசமாக பேசுகின்றனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு ஒன்னரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தனபால் தனது குடும்பத்துடன் இன்றைய தினம் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், இவர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வீட்டு அருகே வசித்து வந்த அஞ்சலா என்பவரின் மூலம் அஞ்சலாவின் மருமகனான காவலராக பணிபுரிந்து வரும் தங்கதுரை மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரி ஆகியோரிடம் மாதம் 25 ஆயிரம் ரூபாய் என பத்து மாதம் தவணையில் செலுத்தி முடிக்கும் படியான முறையில் ரூ. 2 லட்சம் கடன் வாங்கியுள்ளனர். கடன் தொகை கொடுக்கும் போது 20 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்து கொண்டு கொடுத்ததாகவும் அதன் பிறகு மாதம் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்ததாகவும், 8 மாதம் செலுத்திய நிலையில் இதுவரை செலுத்தியது வட்டி மட்டும்தான் அசல் 2 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது. அதற்கு வட்டி சேர்த்து 3 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் கஞ்சா வழக்கு பதிவுசெய்துவிடுவேன் என்று மிரட்டியதால் அந்த தொகையும் தனபால் நகைகளை விற்று செலுத்தி உள்ளார்.
தொடர்ந்து பணம் கேட்டு வந்ததால் தனபால் தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு கேரளாவுக்கு சென்றுவிட்டார். கடந்த மாதம் உறவினர் ஒருவரின் இறப்புக்கு வந்த தனபால் குடும்பத்தினரிடம் காவலர் தங்கதுரை, அவரது மனைவி உமாமகேஸ்வரி, மைத்துனர் சங்கர், மாமியார் அஞ்சலா ஆகியோர், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுவரை கொடுத்தது அனைத்தும் வட்டிக்கான தொகை என்றும், அசல் மற்றும் அதற்கு மீட்டர் வட்டி உடன் சேர்த்து 8 லட்சம் தரவேண்டும் என்றும், அஞ்சலா அடகு வைத்த ஒன்னரை பவுன் நகையை மீட்டுத் தரவேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தனபால் மற்றும் லேசா கூறுகையில், இரண்டு லட்சம் ரூபாய் கடனுக்காக 5 லட்சம் வரை பணம் செலுத்தி விட்டோம். இருப்பினும் கடன் அடையவில்லை எனக் கூறி வீட்டின் முன்பு நின்று ஆபாசமாக பேசுகின்றனர். மேலும் ஒன்றரை வயது குழந்தையை விற்பனை செய்து கடனை அடைக்க சொல்லி மிரட்டுவதாக கூறினர். கந்துவட்டி கும்பலிடம் இருந்து தங்களை மீட்டு உதவவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோன்று, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக சேலம் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நகராட்சி பேரூராட்சி பஞ்சாயத்து உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தொட்டி பம்ப் ஆப்ரேட்டர்களாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கும் பொழுது மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என அரசு ஆணை வழங்கி ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வரும் இவர்களுக்கு குடிநீர் வடிகால் வாரியம் வெறும் 3500 முதல் 5000 வரை மட்டுமே சம்பளம் மட்டுமே தற்பொழுது வழங்கி வருகிறது. இதனால் தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி 20க்கும் மேற்பட்டோர் அரசு நினைத்த சம்பளத்தொகை ரூபாய் 15 ஆயிரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மனு வழங்கினர்.