Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் .....ஏற்காடு மலைப்பாதையை அலங்கரித்த செஸ் போர்டு..!
சேலம் மாநகர் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட விளம்பரப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது.
![Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் .....ஏற்காடு மலைப்பாதையை அலங்கரித்த செஸ் போர்டு..! Chess Olympiad 2022: Painting like chess board for advertisement of Chess Olympiad on barrier wall of Yercaud hill pass. Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் .....ஏற்காடு மலைப்பாதையை அலங்கரித்த செஸ் போர்டு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/26/995373e8df5e84f9b399a2d435ab4e531658834539_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் வருகின்ற 28 ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு விளம்பரங்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் - ஏற்காடு செல்லும் மலைப்பாதை இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள தடுப்பு சுவரில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்திற்காக செஸ் போர்டு போன்ற ஓவியம் வரையப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி சேலம் மாநகர் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட விளம்பரப்பு பலகைகள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் என பதிவிட்டுள்ள ராட்சத பலூன், நகரின் பல்வேறு இடங்களில் போட்டோ பாயிண்ட் உள்ளிட்ட விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று கோவையில் இருந்து செஸ் ஒலிம்பியாட் தீபச்சுடர் சேலம் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதனை சேலம் மாவட்ட எல்லையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்றிணைந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின் சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தீபச்சுடர் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது சேலம் மாவட்டத்தின் சார்பில் 188 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு மரக்கன்றுகள் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சேலம் ஆவின் பாலகத்தில் இன்று தயாரிக்கப்பட்ட அனைத்து பால் பாக்கெட்களிலும் செஸ் ஒலிம்பியாட் குறித்து அச்சிடப்பட்டிருந்தது.
சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட அளவில் சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து 378 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு சென்னைக்கு விமான மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ள உள்ளனர். சென்னையில் நடைபெறும் ஒலிம்பியாட் சதுரங்க போட்டியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் உரையாற்றுகையில், சதுரங்க போட்டி ஐரோப்பிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி இருந்தது. இதனை உடைத்து தமிழகத்தில் உலகளவில் சதுரங்க போட்டி நடத்த தமிழக முதலமைச்சர் ஏற்பாடு செய்தார். இதனையடுத்து சென்னையில் 44 வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. தமிழனின் மூளை எந்த வகையிலும் குறைந்தது இல்லை, மாணவ மாணவிகள் சதுரங்கம் விளையாடி பயிற்சி பெற வேண்டும். இதன்மூலம் மனம் பக்குவம் பெறும் தீர்க்க தரிசன பார்வை தரக்கூடியது என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)