சேலத்தில் பெரும் பரபரப்பு... ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
இன்று காலை மாவட்ட ஆட்சியரின் மின்னஞ்சல் முகவரிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் இந்த வெடிகுண்டு 2.30 மணி முதல் 3:30 மணிக்குள் வெடிக்கும் என மிரட்டல் வந்துள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திர பதிவுத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் என நான்கு தளங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியரின் மின்னஞ்சல் முகவரிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் இந்த வெடிகுண்டு 2.30 மணி முதல் 3:30 மணிக்குள் வெடிக்கும் என மிரட்டல் வந்துள்ளது.

இதனையடுத்து சேலம் டவுன் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் என 30க்கும் மேற்பட்டோர் மோப்பநாய் ரூபி உதவி மற்றும் மெட்டல் டிடெக்டிவ் கருவி ஆகியவையுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வாளர் கோவிந்தராஜன் தலைமையில் தரைத்தளம் முதல் உள்ள நான்கு தளங்களிலும் ஒவ்வொரு துறை வாரியாக சென்று சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக பணியாளர்களின் உடமைகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்பட்டு வருகின்றனர்.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. மேலும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களை பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக வெளியேற்றி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெரும் பரபரப்புடன் காணப்பட்ட நிலையில், தற்போது தீயணைப்பு வாகனமும் வந்துள்ளது. ஒருவேளை அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை அணைக்கும் விதமாக முன்னெச்சரிக்கைக்காக தீயணைப்பு வாகனமும் வந்துள்ளது.





















