‛எங்க ஆட்சியில் எதிர்த்தாங்க... இப்போ அமைதியா இருக்காங்க...’ 8 வழிச்சாலையில் திமுக கூட்டணியை சாடிய இபிஎஸ்!
‛‛உள்கட்டமைப்பை மேம்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே மத்திய அரசின் எட்டு வழிச்சாலை திட்டத்தை அதிமுக அரசு ஆதரித்தது’
சேலம் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் சேலம் ஐந்து ரோடு மெய்யனூர் பகுதியில் இலவச தையற்பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தையல் மையத்தினை எதிர்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‛‛மக்களைப்பற்றியோ மக்கள் பிரச்னைகள் பற்றியோ கவலைப்படாத அரசு திமுக அரசு. தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றை நிறைவேற்றாமல் அனைத்து தரப்பினரையும் ஏமாற்றும் அரசாகவும் திமுக அரசு செயல்படுகிறது. கொரோனா பரவலால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ள சூழலில், சொத்து வரி உயர்வு மக்களுக்கு மிகப்பெரிய சுமை. ஆண்டிற்கு ஒருமுறை சொத்து வரி உயர்வு என்பது ஏற்க முடியாத சுமை. டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து சட்டம் நிறைவேற்றிய அரசு அதிமுக; அங்கு விவசாயம் பாதிக்கும் திட்டங்களை நிறைவேற்ற முடியாது. நிதி ஆதாரத்தை திரட்ட இந்த அரசிடம் எந்த திட்டமும் இல்லை.
இதனால் விரைவில் போக்குவரத்து கட்டணம், மின் கட்டணம் உயரும். அரசு ஊழியர்களையும், ஓய்வு பெற்றவர்களையும் நம்ப வைத்து திமுக கழுத்தை அறுத்துள்ளது. வீடு கட்டுபவர்கள் மிகப் பெரும் சோதனையை சந்தித்தித்து வருகிறார்கள். செங்கல், சிமெண்ட், கம்பி விலை உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலையை திமுக அரசு கட்டுபடுத்தவில்லை
சென்னையில் மாற்று இடம் ஒதுக்காமல் குடியிருப்புகளை அகற்றுவது வேதனை அளிக்கிறது. சொந்த நாட்டில் அகதிகளாய் வாழும் நிலையில் உள்ள மக்களுக்கு அரசு உதவ வேண்டும். அதிமுக ஆட்சியில் சேலம் - சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கு அப்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்தன. ஆனால் இப்போது கூட்டணி கட்சி என்பதால் அனைத்து கட்சிகளும் மௌனம் சாதிக்கின்றனர். உள்கட்டமைப்பை மேம்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே மத்திய அரசின் எட்டு வழி சாலை திட்டத்தை அதிமுக அரசு ஆதரித்தது. எட்டுவழிச் சாலை திட்டத்தால் யாரும் பாதிக்கப்படவில்லை.
அதிமுக, விவசாயிகளுக்கு எதிரான கட்சி அல்ல. விவசாயிகளுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழகத்திற்கு தான் அதிக அளவில் விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்று கொடுத்துள்ளோம். அதிமுக ஆட்சியில் 14,000 பேருந்துகள் வாங்கப்பட்டது. அதனால் தற்போது பேருந்துகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. தற்போது பேருந்துகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதை ஓட்டுநர்களே தெரியப்படுத்தி வருகிறார்கள். நெல் கொள் முதல் நிலையங்களில் லட்ச கணக்கான மூட்டை நெல்னா சேதமடைந்து வருகிறது,’ என்று, அப்போது எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.