ஃபேஸ்புக் காதலனை கரம் பிடித்த பிலிப்பைன்ஸ் காதலிக்கு இறுதியில் நடந்த சோகம்!
சேலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து பிலிப்பைன்ஸ் பெண் உயிரிழந்தார். இவரது சடலத்தை ரயில்வே காவல்துறையினர் மீட்டு விசாரித்து வருகின்றனர். பிலிப்பைன்ஸ் பெண் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது கணவரிடம் விசாரணை நடக்கிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் சேர்ந்தவர் ஹாரிஸ் (வயது 48). இவர் ஆயுர்வேத பொருட்களை பெங்களூரில் விற்று வருகிறார். தனக்கு ஆர்டர் செய்யும் மருந்து கடைகளுக்கு ஆயுர்வேத மருந்துகளை சப்ளை செய்து வந்தார். இவருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரைசல் (வயது 35) என்பவருக்கும் சமூக வலைதளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டது. ரைசல் பிலிப்பைன்சில் மருந்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர் விடுமுறை நாட்களில் பெங்களூர் வந்து சென்றபோது ஹாரிஸ் சுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் சமூக வலைத்தளத்தில் பேசி, பழகி காதலித்து வந்தனர்.
பின்னர் இருவரும் காதல் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இதுகுறித்து ஹாரிஸ் தனது வாட்ஸ் அப் காதலிக்கு தெரிவித்து தான் பெங்களூரில் இருப்பதாகவும், இங்கு வந்தால் திருமணம் செய்துகொண்டு எர்ணாகுளம் இருவரும் செல்லலாம் என தெரிவித்து உள்ளார். இதனால் ரைசல் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விமானம் மூலம் பெங்களூர் வந்துள்ளார். பிறகு காதலர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதன்பிறகு ஹாரிஸ் தனது மனைவியை எர்ணாகுளம் அழைத்துச் செல்ல முடிவு செய்து நேற்று முன்தினம் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு வந்தார். இந்த ரெயில் நேற்று முன்தினம் மாலை சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி என்ற பகுதி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரைசல் ரயில் படிக்கட்டு அருகே நின்று இயற்கை காட்சிகளை ரசித்தபடி வந்துள்ளார். அப்போது ரைசல் ஒரு கையில் குளிர்பானம் குடித்து கொண்டு இருந்து உள்ளார்.
மலைப்பாதையில் உள்ள ஒரு திருப்பத்தில் ரயில் வந்தபோது திடீரென ரைசல் தவறி அப்படியே கீழே விழுந்து விட்டதாக தெரிகிறது. இதில் ரைசல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து தர்மபுரி ரயில்வே காவல்துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடம் சென்று ரைசல் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த இளம்பெண் இறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியதையடுத்து இதில் விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் சேலம் ஜங்ஷன் ரயில்நிலைய காவல்துறையினர் மற்றும் தர்மபுரி ரயில்வே காவல்துறையினர் இடம்பெற்று தற்போது விசாரித்து வருகின்றனர். ரைசல் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் அவரது கணவர் ஹாரிஸ் அழைத்து வந்து சேலத்தில் விசாரணை நடக்கிறது. இந்த நிலையில் இன்று ரைசல் சடலம் உடற்கூறு ஆய்வு செய்ய ரயில்வே காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதன் பின்னர் ரைசல் சடலம் எர்ணாகுளம் எடுத்துச் சென்று இறுதி சடங்கு செய்ய அவரது காதலன் ஹாரிஸ் முடிவு செய்துள்ளதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் பிலிப்பைன்ஸ் நாட்டின் தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.