சேலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணும், சிறுவனும் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு
வாகனத்தில் இருந்து இறங்கிய சிறுவன் பெண்ணை தாக்கியுள்ளார். பதிலுக்கு அந்தப் பெண்ணும் காலணியால் கடுமையாக தாக்கியதால் சிக்னலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
சேலம் மாநகர் கோட்டை பகுதியை சேர்ந்த நக்மா என்ற பெண் இருசக்கர வாகனத்தில் பெரியார் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்த 12 ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் ஒருவர் வாகனத்தை தாறுமாறாக இயக்கி வந்துள்ளார். அப்பொழுது சரியாக வாகனத்தை இயக்க முடியாதா என்று சிறுவனிடம் கேட்டுள்ளார்.
பின்னர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் இருவரும் வாகனங்களில் வந்து நின்றபோது இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது சிறுவனை நக்மா திட்டியுள்ளார். உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய சிறுவன் பெண்ணை தாக்கியுள்ளார். பதிலுக்கு அந்தப் பெண்ணும் காலணியால் கடுமையாக தாக்கியதால் சிக்னலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அப்பொழுது பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் உடனே இருவரையும் அழைத்து வந்து சாலையோரம் நிறுத்தினர். அப்பொழுது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நேரில் வந்து இருவரிடமும் விசாரணை நடத்தினர்.
அப்பொழுது சிறுவன் அஸ்தம்பட்டி ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் சிறுவன் வந்த இருசக்கர வாகனத்தில் போலீஸ் என்று எழுதப்பட்டிருந்தது. அவரிடம் விசாரித்தபோது தந்தை காவலராக பணியாற்றுவதாக தெரிவித்தார். பின்னர் சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு சிறுவனை அழைத்து சென்று பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்