Fire Accident: அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளி பலி? போராட்டதில் உறவினர்கள் - மறுக்கும் மருத்துவமனை
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் மேல் தளத்தில் உள்ள அறுவை சிகிச்சை அறையில் நேற்று காலை மின் கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் அலறியடித்தபடி மருத்துவமனையை விட்டு வெளியேறினர். மேலும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த 65 நோயாளிகள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அருகே உள்ள தனியார் மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் விபத்து ஏற்பட்டவுடன் நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினம் அருகே உள்ள சின்னனூர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற வாலிபர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது சாலை விபத்து ஏற்பட்டு ஞாயிற்றுக்கிழமை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அன்றைய தினமே தலைப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சிகிச்சையிலிருந்த சதீஷை, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து அருகில் இருக்கும் அதிதீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சதீஷ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கணவர் இல்லாமல் குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது என்று கூறி, உயிரிழந்த சதீஷின் மனைவி கதறி அழுந்தது பார்ப்பவர்கள் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த சதீஷை மருத்துவர்கள் காட்ட மறுத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு அரசு முறையான விசாரணை நடத்தும் வரை உடலை வாங்கமாட்டோம் என்று கூறி உறவினர்கள் தெரிவித்துள்ளனர். முற்றுகை போராட்டமும் நடத்தினர்.
இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பின்னர் சேலம் மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்த நிலையில் முற்றுகையானது கைவிடப்பட்டது. இந்த நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே விபத்து ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார். இதற்கும் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்துக்கும் சதீஷ் உயிரிழப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளனர்.