மதுபோதைக்கு அடிமையாகி குடும்பத்தை கவனிக்காத தந்தை - விரக்தியில் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை
தந்தை குடித்துவிட்டு வந்து குடும்பத்தை சரியாக கவனிக்காமல் இருந்து வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி பகுதியை சேர்ந்த மூட்டை தூக்கும் கூலி தொழிலாளி முத்துசாமிக்கு (45) அம்சராணி என மனைவியும் 2 மகள்களும் இருந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி அம்சராணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து இரண்டு மகள்களும் முத்துசாமி உடன் வசித்து வந்த நிலையில் இரண்டாவது மகன் உமா தேவி (15) அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இச்சூழ்நிலையில் தந்தை முத்துசாமி தினமும் மது குடித்துவிட்டு வந்து வீட்டுக்கு தேவையான எந்த பொருட்களையும் வாங்கிக் கொடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மகள்கள் இருவரும் தந்தை முத்துசாமி இடம் கேட்டுள்ளனர். அப்பொழுது முத்துசாமி இரண்டு மகள்களையும் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மூத்த மகள் சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பகுதியில் உறவினர் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இரண்டாவது மகள் உமா தேவியும் மட்டும் வீட்டில் இருந்த நிலையில், சேலம் லாரி மார்க்கெட்டிற்கு மூட்டை தூக்க வந்த முத்துசாமி இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டினுள் மகள் உமா தேவி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இது தொடர்பாக மல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று உமா தேவி சடலத்தைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தந்தை குடித்துவிட்டு வந்து குடும்பத்தை சரியாக கவனிக்காமல் இருந்து வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து மாணவியின் சடலத்தை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உமாதேவியின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருப்பதால், தந்தை குடும்பத்தை கவனிக்காத காரணமா அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)