இது என்னடா ‛பிரியாணி’க்கு வந்த சோதனை
தேர்தல் வந்தால் களைகட்டும் பிரியாணி விற்பனை, கண்காணிப்பு காரணமாக கலை இழந்து வாடி வருவதாக பிரியாணி விற்பனையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
‛குவாட்டருக்கும், பிரியாணிக்கும்... ஓட்டு போட்டா இப்படி தான் நடக்கும்,’ என, பெரும்பாலான சினிமாக்களில் டயாலாக் கேட்டிருப்போம். குவாட்டருக்கும், பிரியாணிக்கும் அரசியலுக்கும் அப்படி என்ன தொடர்பு. அரசியல் ஆள் சேர்ப்பு அவசியம். ஆள் சேர்க்க பிரியாணியும், குவாட்டரும் அவசியம் என்பதாலேயே இது போன்ற வசனங்கள் சினிமாக்களில் இன்றும் இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. பொதுவாகவே நாம் பிரியாணிபிரியர்கள் தான், ஆனாலும் அதை வேறொருவர் வாங்கித் தரும் போது, அதில் வேறொரு அலாதி இருக்கும்.
அப்படி தான் அரசியல் கூட்டங்களுக்கு ஆள் திரட்டப்பட்டது. அதுவும் தேர்தல் நேரத்தில் இன்னும் அதிகமாக இருந்தது. ஆனால் ஓட்டுக்கு பணம் தரும் நடைமுறை எப்போது மேலோங்கத் துவங்கியதோ, அப்போதிலிருந்து பிரியாணி உள்ளிட்ட வாக்காளர்களுக்கான மறைமுக அனுகூலங்கள் தவிர்க்கப்பட்டு விட்டன. வேட்பாளர் தேர்தல் செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்கத் துவங்கியதால் பட்டவர்த்தனமாக தெரியும் ‛குவாட்டர், பிரியாணி’ செலவுகளை வேட்பாளர்கள் குறைக்கத்துவங்கிவிட்டனர்.
இதனால் தேர்தல் நேரத்தில் களைகட்டும் பிரியாணி விற்பனையும், ஆர்டர்களும் இம்முறை கடும் சரிவை சந்தித்திருப்பதாக பிரியாணி விற்பனையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து 12 ஆண்டுகளாக பிரியாணி விற்பனையில் ஈடுபட்டு வரும் எழும்பூரை சேர்ந்த ஷேக் தாவூத் கூறுகையில், ‛ தேர்தல் சமயத்தில் உரிய நேரத்தில் டெலிவரி வழங்க முடியாத அளவிற்கு ஆர்டர்கள் குவியும்; ஆனால் இப்போது எந்த ஆர்டரும் வருவதில்லை. வாக்கு கேட்டு பிரச்சாரத்திற்கு வருபவர்கள் கூட எங்களிடம் வந்து சாப்பிடுவதில்லை; மொத்தமாக சமைத்து அவர்களே பார்சல் போட்டுக் கொள்கிறார்கள். தேர்தலில் பெரிய அளவில் விற்பனை இருக்கும் என நினைத்தேன். ஆனால் எதிர்ப்பு நிறைவேறவில்லை,’ என்றார்.
பிரியாணிக்கு இந்த நிலை என்றால் குவாட்டருக்கு என்ன நிலை என்று தானே கேட்குறீர்கள்? இன்னும் அதற்கான இறங்குமுகம் துவங்கவில்லை என்பதை தான் விற்பனை விபரங்கள் தெளிவாக கூறுகின்றன.