Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
Mk Stalin Kolathur : கொளத்தூர் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் மீது திமுக தலைவர் ஸ்டாலின் சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், இன்று வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்க்கும் பணியானது தொடங்கியுள்ளது.

திமுகவை வீழ்த்திய தவெக
தமிழக சட்டமன்ற தேர்தலில் எதிர்பாரா திருப்பமாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக- அதிமுக என இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், புதிய அரசியல் மாற்றமாக நடிகர் விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது. ஆளுங்கட்சியாக இருந்த திமுக தேர்தலில் தோல்வியை சந்தித்தது. அதிலும் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தது தமிழக மக்களை மட்டுமல்ல இந்திய அரசியலையே திரும்பி பார்க்கவைத்தது.
அந்த வகையில் மு.க.ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ் பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தார். இதன் காரணமாக திமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் இவிஎம் இயந்திரம் மீது ஸ்டாலின் சந்தேகத்தை எழுப்பியிருந்தார்.
14 வாக்குச்சாவடி இயந்திரம் மீது சந்தேகம்
அந்த வகையில் கொளத்தூர் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளின் உள்ள வாக்கு இயந்திரத்தில் திமுகவிற்கு குறைவான வாக்குகளே பதிவாகியிருந்தது. எனவே அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதிக்க வேண்டும் தேர்தல் ஆணையத்தில் கொளத்தூர் தொகுதி வேட்பாளரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கோரிக்கை மனு கொடுத்திருந்தார். இதனையடுத்து கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வி.வி.பாட் (VVPAT) கருவிகளின் தொழில்நுட்பச் சோதனை மற்றும் சரிபார்ப்பு பணி இன்று முதல் தொடங்கியுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பாதுகாப்பு அறையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கொளத்தூர் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 42 பாலேட் யூனிட்டுகள் (Ballot Units), 14 கன்ட்ரோல் யூனிட்டுகள் (Control Units) மற்றும் 14 வி.வி.பேட் (VVPAT) கருவிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது.இதனையடுத்து கொளத்தூர் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடியில் இயந்திரங்கள் சரிவர இயங்குகிறதா.? என ஆய்வு பணியை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று தொடங்கியுள்ளனர்.
இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தினந்தோறும் வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்க்கும் பணியானது நடைபெறவுள்ளது. ஒரு நாளைக்கு 2 வாக்குச்சாவடி என 7 நாட்களுக்கு 14 வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகள் மற்றும் இயந்திரத்தின் நிலை தொடர்பாக ஆய்வு செய்யப்படவுள்ளது.
மறுவாக்கு எண்ணிக்கையா.?
இந்தச் சோதனையில் கலந்து கொள்ள கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், "இது வாக்குகளை மறுஎண்ணிக்கை செய்வதற்கான நடவடிக்கை அல்ல. இ.வி.எம். இயந்திரங்கள் சரியாக செயல்பட்டனவா என்பதை உறுதி செய்யும் தொழில்நுட்பச் சோதனை மட்டுமே" என்று தெரிவித்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















