ஏன் திமுக கூட்டணியில் போக முடியாது? தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் ! பகையும் இல்லை, நண்பரும் இல்லை - ஜான் பாண்டியன் சூசகம்..
தென் மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலை ஏற்படாமல் இருக்க அனைத்து சாதி தலைவர்களையும் அழைத்து சமூக நல்லிணக்க கூட்டம் நடத்த உள்ளேன். கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
நெல்லை பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் இல்லத்தில் அக்கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெறும் கொலைகள் வன்மையான கண்டனத்திற்குரியது. தேவேந்திர குல வேளாளர் இளைஞர்கள் சமூக மக்கள் எவ்விதமான முன் விரோதம் இல்லாமல் கொலை செய்யப்படுகின்றனர். இந்த கொலை தொடர்பான உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து இரும்பு கரம் கொண்டு அடக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்குள் எந்த ஜாதி வேற்றுமையும் கிடையாது, அனைத்து ஜாதியினருடனும் இணக்கமாக வாழ்ந்து வருகிறோம். இதை ஜாதி ரீதியாக ஒரு சில கட்சிகள் எண்ணுகிறது. இங்கு முன்விரோதமும் இல்லை, ஜாதி வேற்றுமையும் கிடையாது, அதனால் ஏற்படும் சண்டைகளும் கிடையாது, கொலைகளுக்கு காரணமே இல்லாமல் அப்பாவிகள் கொலை செய்யப்படுகின்றனர். இதனை கண்டித்து நவம்பர் 20 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தென் மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலை ஏற்படாமல் இருக்க அனைத்து சாதி தலைவர்களையும் அழைத்து சமூக நல்லிணக்க கூட்டம் நடத்த உள்ளேன். கூடிய விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.
”காவிரி டெல்டா பகுதிகளில் 2 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் கூட பயிர்கள் மூழ்கி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு அவர்கள் சாகும் நிலை உருவாக்கி இருப்பதை அரசு கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு நிலத்திற்கு ஏற்ப உரிய நிதியை வழங்க வேண்டும் அரசை வலியுறுத்துகிறோம். நவம்பர் 30 ஆம் தேதி என்னுடைய பிறந்ததினம் கொண்டாடும் வேளையில் மக்களுக்காக நன்மை செய்யும் விதங்களில் ஒவ்வொரு மண்டலமாக மண்டல கூட்டம் அறிவித்து தமமுக தேர்தல் குறித்து விவாதம் செய்து அதற்கான வேலைகளை துவங்க உள்ளோம். அதே போல மக்கள் நலனுக்காகவும், பொதுமக்கள் பிரச்சனைக்காகவும் ஜாதி, மத, பேதமின்றி இணக்கமாக வாழ அனைத்து மக்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தென் மாவட்டங்களில் நடைபெறும் கொலைகள் ஜாதிய கொலைகளாக சித்தரிப்படுகிறது. இந்த கொலைகள் ஜாதிய கொலைகள் இல்லை கஞ்சா போதையில்தான் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். தற்போதைய சூழலில் பிசிஆர் என்பது கண்துடைப்பு. இது மக்களை ஏமாற்றுவது. அதை வைத்து எந்த தண்டனையும் இதுவரை வழங்கப்படவில்லை, இதை எப்போதும் நான் வெறுக்கிறவன்” என்றார்.
“தற்போதைய அரசியல் சூழலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இல்லை, அதிமுக கூட்டணியிலும் இல்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார். மேலும் ”பாஜகவும், அதிமுகவும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்ளவில்லை என்றும் எதிர்காலத்தில் அவர்கள் இணைந்தால் மகிழ்ச்சி” என்றார்.
திமுக காங்கிரஸ் கூட்டணியில் இணைய வாய்ப்பில்லைதானே என்று செய்தியாளர்கள் கூறியதற்கு, ”அது எப்படி வாய்ப்பில்லை என்று நீங்கள் முடிவெடுக்கலாம், நாங்கள்தானே முடிவெடுக்க வேண்டும். ஏன் திமுக கூட போக முடியாது. அப்படி சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம், பகையும் இல்லை, நண்பரும் இல்லை. சூழ்நிலையை பொறுத்தது. அரசியல் என்பது சூழ்நிலைதான்” என்றார்.