Selvaganabathy: புதுச்சேரிக்கு புதிய மாநில தலைவர் நியமனம்; யார் இந்த செல்வகணபதி..?
புதுச்சேரி அரசியல் வரலாற்றில் முதல் முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக பாஜகவை சேர்ந்த செல்வகணபதி தேர்வானார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல் பாஜக எம்.பி. ஆனவர் செல்வகணபதி. பிரெஞ்சு ஆட்சியில் இருந்து விடுபட்ட புதுவையில் 1963 முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலில் பலமுறை பாஜக போட்டியிட்டுள்ளது. ஆனால், முதல் முறையாகக் கடந்த 2001-ம் ஆண்டு ரெட்டியார்பாளையம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றார். அப்போது தான் முதன் முறையாக பாஜக சட்டமன்றத்தில் நுழைந்தது.
அதன் பின்னர் தேர்தலில் பாஜக வெற்றிபெறவில்லை. கடந்த 2016ம் ஆண்டு 3 நியமன எம்எல்ஏக்கள் பாஜக சார்பில் மத்திய அரசால் நியமிக்கப்பட்டனர். அப்போது பாஜக மாநிலத் தலைவராக இருந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் பாஜக நியமன எம்எல்ஏக்களாக இருந்தனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 9 இடங்களில் போட்டியிட்ட பாஜக, 6 இடங்களில் வெற்றி பெற்றது. என்ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணி ஆட்சியில் சட்டப்பேரவைத் தலைவர், 2 அமைச்சர்கள், முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் ஆகிய பதவிகளை பாஜக பெற்றது. இதை தவிர பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் 33 எம்எல்ஏக்கள் கொண்ட சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் 9 பேர் உள்ளனர்.
புதுச்சேரியில் மக்களவை, மாநிலங்களவைத் தேர்தல்களில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் இதுவரை வெற்றி பெற்றதில்லை. ஆனால், பலமுறை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக போட்டியிட்டுள்ளது. புதுச்சேரி அரசியல் வரலாற்றில் முதல் முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக பாஜகவை சேர்ந்த செல்வகணபதி தேர்வானார். இந்த நிலையில் தற்போது செல்வகணபதி புதுச்சேரி பாஜக மாநில தலைவராக நியமிக்கப்ட்டுள்ளார்.
புதுச்சேரியின் பாஜக தலைவராக சாமிநாதன் இருந்து வந்தார். இந்த நிலையில், சாமிநாதன் தற்போது மாற்றப்பட்டு, அவருக்கு பதில் புதிய பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பியை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகலாந்து, புதுச்சேரியின் பாஜக மாநில தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுவை மாநில பாஜக தலைவராக சாமிநாதன் எம்.எல்.ஏ. 2015ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சமீபத்தில அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என செய்தியாளர் சந்திப்பில் கூறினார். இதையடுத்து அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சிக்கத் தொடங்கினர். இந்த நிலையில் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை வைத்து வருவதாக செய்திகள் வெளியானது.
இதை தொடர்ந்து புதுச்சேரியிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில்லை என அறிவித்தது. அதிமுகவுடன் கூட்டணி இல்லாவிட்டால் தென்னிந்தியாவிலேயே பாஜக என்ற ஒரு கட்சி இடம் தெரியாமல் போயிருக்கும். கர்நாடகத்தில் இருந்த பாஜக தனது ஆட்சியை தேர்தல் பொறுப்பாளர் அண்ணாமலையால் தான் இழந்தது என்பதை பாஜக தலைவர்கள் உணர வேண்டும். அண்ணாமலையை ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.