(Source: ECI/ABP News/ABP Majha)
Pradeep Yadav IAS: தந்தை பாணியில் தமயன்; உதயநிதி ஸ்டாலினுக்கு தனிச்செயலர்- யார் இந்த பிரதீப் யாதவ் ஐஏஎஸ்?
அதிமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளராக பிரதீப் யாதவ் பணியாற்றியபோதுதான் 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு அறிவிப்பு வெளியானது.
துணை முதலமைச்சர் உதயநிதிக்கு ஸ்டாலினுக்கு தனிச் செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். யார் இவர், நியமிக்கப்பட்டதன் பின்னணி என்ன? பார்க்கலாம்.
யார் இந்த பிரதீப் யாதவ்?
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதீப் யாதவ் ஐஏஎஸ். 1992ஆம் ஆண்டு தமிழ்நாடு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். முதன்முதலில் திண்டுக்கல் மாவட்டத்தில் பணியைத் தொடங்கியவர், அடுத்தடுத்து வருவாய்த்துறை, கிராமப்புற மேலாண்மை, தொழில்துறை, மனித வள மேம்பாடு, நிதித்துறை உள்ளிட்ட துறைகளில் துணைச் செயலாளராகப் பணியாற்றி உள்ளார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளராகப் பணியாற்றினார். இந்த நேரத்தில்தான் புதிய கல்விக் கொள்கை அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு அறிவிப்பு வெளியானது. எனினும் கல்வியாளர்கள், பொது மக்கள் எதிர்ப்பை அடுத்து, அது கைவிடப்பட்டது.
பல்வேறு பொறுப்புகளை வகித்த மூத்த அதிகாரி
தொடர்ந்து கைத்தறி மற்றும் காதித் துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் பணியாற்றினார். மின்சாரம் மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் நிர்வாக இயக்குநர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் உள்ளிட்ட பணிகளை வகித்துள்ளார்.
மு.க.ஸ்டாலினுக்கு அசோக் வர்தன் ஷெட்டி
இதற்கிடையே 2006 - 2011 திமுக ஆட்சிக் காலத்தில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தார். அப்போது உள்ளாட்சித் துறை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டியை நியமித்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. ஆட்சி நிர்வாகத்தில் புதியவரான மு.க.ஸ்டாலினுக்கு கொள்கை உருவாக்கம், அரசு நிர்வாகம் குறித்த ஆலோசகராக அசோக் வர்தன் ஷெட்டி செயல்பட்டார்.
இதற்கு நன்றிக் கடனாக, முதல்வராக ஸ்டாலின் 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்றபோது, ஆலோசகராக அசோக் வர்தன் நியமிக்கப்பட உள்ளதாகக் கூடத் தகவல் வெளியானது.
தந்தை வழியில் தமயன்
இந்த நிலையில் தந்தை கருணாநிதி பாணியில் முதல்வர் ஸ்டாலின், தனது மகனும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினுக்குச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவை நியமித்துள்ளார் என்று கூறப்படுகிறது.