(Source: ECI/ABP News/ABP Majha)
KP Anbalagan Profile | அரசியல் தொடக்கம் ஒரு விபத்து..! அதற்குப்பின் கிடுகிடு வளர்ச்சி.! யார் இந்த கேபி அன்பழகன்?
தி.மு.க நிர்வாகி ஒருவரின் சூழ்ச்சியால், கே.டி.கோவிந்தனுக்கு ‘சீட்’ கிடைக்காமல் போக, கோபமடைந்து, அ.தி.மு.க-வில் இருந்த அண்ணன் மகன் அன்பழகனைக் களத்திலிறக்கி வெற்றியும்பெறச் செய்கிறார் கே.டி.கோவிந்தன்.
சிறந்த மண்வளம், ஓரளவு நீர்வளம் கொண்ட தொகுதி பாலக்கோடு. தக்காளி, தேங்காய், பூ உள்ளிட்ட பொருள்களின் உற்பத்தி இந்தப் பகுதியில் அதிகம். இங்கு விளையும் இளநீர் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தென்னை ஓலையிலிருந்து பிரிக்கப்படும் ஈர்க்குச்சிகள் துடைப்பமாக ஆக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. மிகவும் பின்தங்கிய தொகுதியான பாலக்கோட்டில், தொடர்ந்து ஐந்து முறை வென்று 21 ஆண்டுகளாக எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் கே.பி.அன்பழகன். அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடந்து கொண்டிருக்கிறது. கடந்த கால ஆட்சியில் ஊழல் லஞ்சம், மற்றும் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த புகார்களில் மாஜி அமைச்சர்கள் சிக்கி வருகிறார்கள். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத் துறை கே.பி.அன்பழகன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இப்போது இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. சென்னை, தருமபுரி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கேபி அன்பழகன் தனது குடும்பத்தினர் பெயர்களில் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும், சொத்துக்குவிப்பு தொடர்பாக கேபி அன்பழகனின் மனைவி, 2 மகன்கள், மருமகள் உள்ளிட்டோர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் அன்பழகன் தன்னுடைய வருமானத்தை விட கூடுதலாக ரூபாய் 11.32 கோடி சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது... அன்பழகனின் மனைவி 2 மகன்கள், மருமகள் உள்பட 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.. அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது… யாரிந்த கேபி அன்பழகன், அமைச்சராக என்ன செய்தார்?
கிருஷ்ணகிரியிலிருந்து தருமபுரி செல்லும் சாலையில் உள்ள கெரகோட அள்ளி கிராமத்தின் குறுகிய பாதையில் வளைந்து நெளிந்து சென்றால் பிரமாண்டமாக வரவேற்கும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் பங்களா. சொந்த பந்தங்கள் சூழ்ந்த ஊரில் ராஜாவை போல வசிக்கிறார். அன்பழகனின் அப்பா கே.டி.பச்சியப்பனும், சித்தப்பா கே.டி.கோவிந்தனும் அரசியல் பின்னணி உடையவர்கள் என்பதால் தந்தையிடம் அரசியல் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்த அன்பழகன், அ.தி.மு.க-வில் அன்னநடை போட்டிருக்கிறார். அரசியலில் அரசல் புரசலாக இருந்தவர் எப்படி தீவிர அரசியல்வாதி ஆகிறார் என்பதே ஒரு ஸ்வாரஸ்யமான விபத்து.
1996 உள்ளாட்சித் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சியில் இருந்தார், அன்பழகனின் சித்தப்பா கே.டி.கோவிந்தன். அவர் மாவட்டக் கவுன்சிலர் பதவிக்குத் துண்டுவிரித்தபோது தி.மு.க ஆட்சியில் இருந்தது. அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றிருந்தது. தி.மு.க நிர்வாகி ஒருவரின் சூழ்ச்சியால், கே.டி.கோவிந்தனுக்கு ‘சீட்’ கிடைக்காமல் போக, கோபமடைந்து, அ.தி.மு.க-வில் இருந்த அண்ணன் மகன் அன்பழகனைக் களத்திலிறக்கி வெற்றியும்பெறச் செய்கிறார் கே.டி.கோவிந்தன். அப்போதுதான் தேர்தல் அனுபவம் வருகிறது அன்பழகனுக்கு.
ஒரே ஒரு முறை கிக்ஸ்டார்ட் செய்து விட்டபின் நிற்காத ஆட்டோ மீட்டராக ஓடியது அன்பழகனின் வளர்ச்சி. மாவட்ட கவுன்சிலரான பின்னரே, அ.தி.மு.க உறுப்பினர் அட்டையையே புதுப்பித்தார் அன்பழகன் என்று கூறுவார்கள். அதன்பின்னர், எல்லாமே அவருக்கு ஏறுமுகம்தான். கட்சியில், காரிமங்கலம் ஒன்றியச் செயலாளர் பொறுப்புக்கு வருகிறார், கட்சிப்பணி வேகமெடுக்க போயஸ் கார்டனில் அறியப்பட்டார், ஜெயலலிதாவின் பார்வை பட்டதும், தருமபுரி மாவட்டச்செயலாளராக நியமிக்கப்படுகிறார், இதற்கிடையே, 2001 சட்டமன்றத் தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு விருப்பமனு கொடுத்திருந்தார் கேபி அன்பழகன். பாலக்கோடு தொகுதியில் வன்னிய சமூக மக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். அவர்களே வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதால், அதே சமூகத்தைச் சேர்ந்த அன்பழகனுக்கு தொகுதி ராசியாகி போனது. அந்தத் தேர்தலில் வெற்றிபெற்றவருக்கு, இரண்டு ஆண்டுகள் கழித்து அமைச்சரவையிலும் இடம் கிடைத்தது. செய்தித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர், சில மாதங்களில் உள்ளாட்சித்துறையையும் கூடுதலாக கவனிக்க ஆரம்பித்தார்.
அதன்பிறகு 2006-ல் தி.மு.க ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்தாலும் அப்போதும் பாலக்கோடு தொகுதியில் தோற்கவில்லை அன்பழகன். தேர்தலில் நின்றபோதெல்லாம் வெற்றி பெற்றார், சொந்தபந்தங்கள் சூழ்ந்த தர்மபுரி மாவட்டக்காரர் என்றால் வெற்றிபெற செய்யாமல் போவார்களா! 2011-ல் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது, மூன்றாவது முறையாகவும் அன்பழகன் எம்.எல்.ஏ ஆனபோது, அந்தச் சமயத்தில், சில சர்ச்சைகளில் சிக்கியிருந்த அவர்மீது ஜெயலலிதா கடும் கோபத்தில் இருந்தார். ஆட்சி முடியும் வரை அமைச்சரவையில் அன்பழகனுக்கு இடம் கொடுக்க வில்லை. அப்போது மட்டுமே அவருக்கு ஒரு சிறு தொய்வு ஏற்படுகிறது.
ஆனால் 2016 தேர்தலிலும் வெற்றி தொடர்ந்த நிலையில், ஜெயலலிதாவிடம் செய்த தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார் அன்பழகன். தொடர்ந்து, நான்காவது முறை எம்.எல்.ஏ-வாக நீடிப்பதால், அன்பழகனைக் மன்னித்து கண்டிஷன்ஸ் அப்ளைடு போட்டு உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கிறார் ஜெயலலிதா. வேளாண் அமைச்சராக இருந்த துரைக்கண்ணு மறைந்த நிலையில், அவரது இலாகாவும் அன்பழகனுக்குக் கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. கூட்டணியில் இருந்தாலும், கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக தைலாபுரம் போகும் அமைச்சர்கள் அணியில் அன்பழகன் இருந்தாலும், அவருக்கும் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் பனிப்போர் வெகு நாட்கள் நடந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, இருவரும் தரம்தாழ்ந்து மாறி மாறி விமர்சித்துக்கொண்டதெல்லாம் அரசியல் அநாகரிகத்தின் உச்சம். ‘அடிமை அமைச்சருக்கு ஆண்மை இருக்கா?’ என்று விமர்சித்த அன்புமணியை எதிர்த்து, ‘ஐந்து அறிவு ஜீவன். தருமபுரியில் மீண்டும் எம்.பி-யாக விடமாட்டேன்’ என்று சவால் விடுத்திருந்தார் அன்பழகன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட அ.தி.மு.க - பா.ம.க இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது.
தருமபுரியில் சிப்காட் அமைக்கப்படுவது தொடர்பான அந்த வாக்குவாதத்தில், “அன்பழகனுக்கு ஆண்மை இருந்தால், சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று சீறியிருந்தார் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி. வெகுண்டெழுந்த அன்பழகன், ‘‘என் மாவட்டத்தில் பிழைக்கவந்த அன்புமணிக்கே அவ்வளவு திமிர் என்றால், இங்கேயே பிறந்து வளர்ந்த எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்...’’ என்று திரும்பவும் கர்ஜித்தார். இப்படி வார்த்தைக்கு வார்த்தை ‘என் ஊர்’ என்று பேசுகிற உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் 'தொகுதிக்குள் நடக்கும் காதுகுத்து, கல்யாணம், துக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது மட்டுமே பாலக்கோடு தொகுதிக்கு அவர் செய்தது, வேறொன்றுமில்லை’ என்ற விமர்சனம் வெகுநாட்களாகவே வைக்கப்பட்டு வருகிறது.
தொகுதியில் திருமணம், காதுகுத்து, துக்க நிகழ்வுகள் என எல்லா நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டி, தன் செல்வாக்கைக் குறையவிடாமல் கட்டிக் காத்து வருகிறார் அன்பழகன். அதனாலேயே அதிமுகவே சரிந்தாலும் 2021 தேர்தலில் அனாயசமாக ஒரு வெற்றியை பெற்றார். அமைதியும் எளிமையும் அன்பழகனின் அடையாளம்… "அடையாளமா? பிம்பமா?" என்பதுதான் கேள்வி. அவரின் மறுபக்கம் வேறுமாதிரியானது என்று அப்போதே அ.தி.மு.க பிரமுகர்கள் சிலர் கூறுவர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் தொடர்ந்து 5 முறை வென்று 21 ஆண்டுகளாக எம்.எல்.ஏ, இரண்டு முறை அமைச்சர் என அதிகார மையமாகவே சென்ற ஆட்சி வரை வலம் வந்தவர்தான் கே.பி. அன்பழகன். கொரோனாத் தொற்றைக் காரணம் காட்டி கல்லூரி அரியர் தேர்வுகளை ரத்துசெய்து, ‘மாணவர்களின் மனித தெய்வம்’, ‘அரியர் மாணவர்களின் அரசன்’ போன்ற பட்டங்களை எடப்பாடி பழனிசாமிக்கு வாங்கிக்கொடுத்த அதே அன்பழகன்தான், இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தீவிரமாக நடந்து வருகிறது. 11 கோடிக்கும் மேற்பட்ட கணக்கில் வராத சொத்துக்கள் என்று அறிவிப்புகள் வந்தவாறு உள்ளன. அமைச்சராக என்ன செய்தார்? தன் தொகுதிக்குச் செய்தது என்ன?
‘பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் புரள்கிறது என்று அவர் அமைச்சராக இருந்த சமயத்தில் பல செய்திகள் வர கேட்டிருப்போம். அதனைக் கண்டு வேதனை அடைந்ததாக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தே இரண்டு முறை வெளிப்படையாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் ‘துணைவேந்தர்களை நியமிப்பதே ஆளுநர்தான்’ என்று பதிலடி கொடுத்தார் அன்பழகன். இருவருமே மாறி மாறி குற்றம் சுமத்திக்கொண்டாலும், துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் புரையோடியதையோ இருவருமே மறுக்கவில்லை. கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் பணி நியமனங்களில் ஊழல்புரிந்ததாக அப்போது கைது செய்யப்பட்டார்... இன்னொரு பக்கம் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நிகழ்ந்ததாக, அந்தத் தேர்வே ரத்து செய்யப்பட்டது… முறைகேடு செய்த எட்டுப் பேர் கைது செய்யப்பட்டார்கள், அண்ணா பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், இசைப் பல்கலைக்கழகம் என சமீபகாலங்களில் வெளி மாநிலத்தவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டார்கள். `அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தர வேண்டும்' என அமைச்சரைக் கேட்காமலே மத்திய அரசுக்குத் துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதிய விவகாரம் அப்போது பயங்கர சர்ச்சையானது. அதேபோல அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டு எம்.டெக் படிப்புகளில் மாநில அரசின் இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற மறுத்து சென்ற ஆண்டு மாணவர் சேர்க்கையையே நிறுத்திய விவகாரமும் நீதிமன்றத்துக்குப் போனது. அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாமீதான ஊழல் புகார் விஷயத்தில், எதிர்க்கட்சிகள் கடுமையான அழுத்தம் கொடுத்த பின்னரே அசைந்துகொடுத்தார் அன்பழகன். ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை அமைத்தார். இந்த விசாரணை நடக்கும் நேரத்தில் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அன்பழகன் சந்தித்ததும் சர்ச்சைக்குள்ளானது. சூரப்பா மீதான விசாரணையை நீர்த்துப்போகச் செய்ய முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சிகள் அப்போது குற்றம் சாட்டின. அப்போது ஒற்றை ஆளாக சூரப்பாவிற்கு டார்ச் லைட் தூக்கி நின்றவர் கமல்ஹாசன் மட்டுமே. இப்படி ஆட்சியில் இருந்தபோது அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி கொண்ட இவரை தற்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் சுற்றி வளைத்துள்ளனர்.