Gingee Masthan: அரசியலில் இருந்து ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்? ஒவ்வொன்றாக பறிக்கப்பட்ட பதவிகள்...
விழுப்புரம் அரசியலில் இருந்து செஞ்சி மஸ்தானை ஓரம் கட்டும் வகையில் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு மாவட்டத்தின் ஒரே அமைச்சராக பொன்முடி உள்ளார்.
விழுப்புரம் : புதிய அமைச்சரவை மாற்றத்தால் செஞ்சி மஸ்தான் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சரவையில் மாற்றம் வருமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தி.மு.க. சொன்னதைத்தான் செய்வோம். சொல்வதைத்தான் செய்வோம். நிச்சயமாக, உறுதியாக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும்” என்று கூறி இருந்தார். இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக இன்று பதவியேற்கவுள்ளார் என்றும், அதற்கு ஆளுநர் தரப்பில் ஒப்புதல் அளித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவையில் மாற்றம்: செஞ்சி மஸ்தான் பதவி பறிப்பு
இந்நிலையில், தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் உதயநிதி ஸ்டாலின் , இன்று துணை முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.
இதையடுத்து புதிய அமைச்சரவையில் மனோ தங்கராஜ். செஞ்சி மஸ்தான், K ராமசந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து அமைச்சரவையில் மீண்டும் அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி.
இதை தொடர்ந்து ஆவடி நாசர், கோவி. செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தை யார் கண்ட்ரோலில் எடுப்பது!
விழுப்புரம் மாவட்டத்தை யார் கண்ட்ரோலில் எடுப்பது என்பதில் நீண்ட காலமாகவே அமைச்சர் பொன்முடிக்கும், அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் இடையே கடுமையான போட்டி நடைப்பெற்று வந்தது. இதனால் இருவர் ஆதரவாளர்களிடையே அவ்வப்போது கோஷ்டி பூசல் ஏற்படுவது, பேனர்கள் வைப்பதில் இரு தரப்புக்கும் இடையே கடும் போட்டா போட்டி நிலவுவது ஆகியவை இருந்து வந்தன. குறிப்பாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மஸ்தானிடம் இருந்து அமைச்சர் பொன்முடி மைக்கை பிடுங்கிய போது, அந்த கோஷ்டி பூசல்கள் வெளிப்படையாகவே வெளியே வந்தது.
இந்த நிலையில் தான் செஞ்சி மஸ்தானுக்கு எதிராக கள்ளச்சாராயம் புகார், விழுப்புரத்தில் செஞ்சி மஸ்தான் குடும்பத்தினரின் செலுத்தும் ஆதிக்கம், தன்னுடைய ஆதரவாளர்களுக்கு மட்டும் செய்வது, டெண்டர் ஒதுக்குவதில் பாரபட்சம் ஆகிய புகார்களால் திமுக நிர்வாகிகளும் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கினர். இதனால் முதலில் மகன் மற்றும் மருமகனின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த ரிப்போர்ட்கள் அனைத்துமே முதல்வர் ஸ்டாலினின் காதுகளுக்கு போக, அது இல்லாமல் பொன்முடியும் செஞ்சி மஸ்தானுக்கு எதிராக காய்களை நகர்த்த விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரார் பதவியை இழந்தார் அவர். அவருக்கு பதிலாக திண்டிவனம் ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த டாக்டர் ப. சேகர் என்பவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக பொருப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ப. சேகர் பொன்முடியின் ஆதரவாளர் என்றெல்லாம் சொல்லபட்டது.
இப்படி இருக்கையில் மீண்டும் செஞ்சி மஸ்தானுக்கு கட்சி பதவியை வழங்க முடிவு செய்த திமுக, தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின், மாவட்ட அவைத்தலைவராக அவர் நியமிக்கபடுவதாக அறிவிப்பை வெளியிட்டது. இந்த மாவட்ட அவை தலைவர் பதவி, ப. சேகர் வகித்து வந்ததே. இந்நிலையில் செஞ்சி மஸ்தான் வகித்து வந்த பதவியை ப. சேகருக்கும், சேகர் வகித்து வந்த பதவியை மஸ்தானுக்கும் வழங்கியுள்ளது திமுக.
இந்நிலையில் விழுப்புரம் அரசியலில் இருந்து செஞ்சி மஸ்தானை ஓரம் கட்டும் வகையில் டம்மி பதவி ஒன்றை பெயருக்கு திமுக வழங்கியுள்ளதாக கருத்துக்கள் எழுந்தது. இந்த நிலையில் புதிய அமைச்சரவையில் மனோ தங்கராஜ். செஞ்சி மஸ்தான், K ராமசந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குடும்ப பதவிகள் பறிப்பு
ஏற்கனவே, அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சகோதரர் 'காஜா நசீர்' செஞ்சி நகர திமுக செயலாளராகவும், மஸ்தானின் மகன் மொக்தியார் அலி செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளராகவும், அவரது மருமகன் ரிஸ்வான், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வந்தனர். அமைச்சர் செஞ்சி மஸ்தானின் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவில் பொறுப்புகளை வகித்து கொண்டு கட்சியினரை அனுசரித்து செல்லாமல் திமுகவில் கோஷ்டி பூசலை உருவாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் அவர்களை பதவியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.