Premalatha Vijayakanth : ’மருத்துவமனையில் விஜயகாந்த்’ செயல் தலைவராகும் பிரேமலதா, இளைஞரணிக்கு விஜயபிரபாகரன்...?
’நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய கட்டாயத்தில் பிரேமலதா இருக்கிறார்’
தேமுதிகவின் நிறுவனரும் அக்கட்சியின் நிரந்தர தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்சிக்கு புத்துயிர் ஊட்டி நாடளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய நெருக்கடியும் அவசியமும் பிரேமலதாவிற்கு ஏற்பட்டிருக்கிறது.
மாஸ்க் அணியத் தொடங்கிய விஜயகாந்த்
விஜயகாந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவரால் சரிவர பேசமுடியாத நிலை ஏற்பட்டதில் இருந்து அவரது மனைவியும் தேமுதிகவின் பொருளாளருமான பிரேமலதாவே கட்சியை நடத்தி வருகிறார். தேர்தல் பிரச்சாரங்களில் விஜயகாந்தின் முகத்தை காட்டி, அவர் கையசைப்பதை மட்டுமே வைத்து வாக்கு சேகரித்து வந்த பிரேமலதா, கொரோனா கால கட்டத்திற்கு பிறகு விஜயகாந்தின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவரது முகத் தோற்றமும் மாறத் தொடங்கியது. அதனால், பிறந்தநாளாக இருந்தாலும் திருமண நாளாக இருந்தாலும் விஜயகாந்துடன் அவர் குடும்பத்தினர் புகைப்படம் எடுக்கும்போதெல்லாம் அவருக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டு இருக்கிறது.
செயற்கை சுவாசத்தில் விஜயகாந்த் ? உண்மை என்ன ?
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்திற்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் அவர் உடல் மேலும் நலிவுற்று இருப்பதாகவும் தகவல் தீயாய் பரவின. ஆனால், தேமுதிக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் வழக்கமான பரிசோதனைகள் முடிந்து அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தேமுதிக-வில் விரைவில் புதிய மாற்றங்கள்
இப்படிப்பட்ட சூழலில் நாடாளுமன்ற தேர்தல் வெகு தொலைவில் இல்லை. ஏற்கனவே, இண்டியா கூட்டணியும் தேசிய ஜனநாயக கூட்டணியும் தேமுதிக-வை புறக்கணித்துள்ள நிலையில், கட்சிக்கு புத்துயிர் ஊட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், கட்சி கட்டமைப்பில் விரைவில் மாற்றங்களை ஏற்படுத்த பிரேமலதா திட்டமிட்டிருக்கிறார்.
மு.க.ஸ்டாலின் பாணியை பின்பற்றும் பிரேமலதா ?
திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கட்சி பணிகளை கவனிக்க முடியாமல்போனபோது, செயல் தலைவராக மு.க.ஸ்டாலினை நியமித்தார். அதே பாணியை பின்பற்றி கட்சியின் பொருளாளராக உள்ள பிரேமலதாவை தேமுதிக-வின் செயல் தலைவராக விரைவில் விஜயகாந்த நியமிக்கவிருக்கிறார்.
விஜயபிரபாகரனுக்கும் பொறுப்பு
அதோடு, கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாமல் பிரச்சாரம், கட்சி பணிகள், நிகழ்ச்சிகள் என வலம் வரும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு தேமுதிக இளைஞரணி தலைவர் அல்லது செயலாளர் பொறுப்பும், தேமுதிக துணை செயலராக உள்ள விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ்க்கு பிரேமலதா வகிக்கும் பொருளாளர் பதவியும் விரைவில் கொடுக்கப்படவுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வியூகம்
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பான அதிகாரங்களும் பிரேமலதாவிற்கு வழங்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் மருத்துவமனையில் இருக்கும்போதோ அல்லது அவர் வீடு திரும்பிய பின்னரோ இந்த மாற்றங்கள் தேமுதிக-வில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் தேமுதிக பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்றும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஆனால், இது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக நிலையில், பிரேமலதா தேமுதிகவின் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்ட பின், கூட்டணி, தேர்தல் பணிகள் விரைவுப்படுத்தப்படும் என தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.