TVK Vijay: சீமானின் பலிக்காத கனவும்.. விஜயின் அபார வெற்றியும்.. லைனில் திமுக அமைச்சர்கள் - அரசியல் கணக்கு
TVK Vijay Seeman: தமிழ்நாட்டு அரசியலில் தவெக தலைவர் விஜயின் நகர்வுகள் எதிர்பார்த்த வெற்றியை தருவதாக கூறப்படும் நிலையில், சீமானின் முயற்சிகள் பலனளிக்கவில்லை என கூறப்படுகிறது.

TVK Vijay Seeman: தவெக தலைவர் விஜயின் குற்றச்சாட்டுகளுக்கு, திமுக அமைச்சர்கள் தீவிரமாக பதிலடி அளித்து வருகின்றனர்.
”தனி ஒருவன்” பாணியில் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தீவிரப்படுத்தியுள்ளார். அதன்படி நேற்று நாகை மற்றும் திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட அவர், விவசாயிகள் மற்றும் மீனவ மக்களிடையே நிலவும் பிரச்னைகளை குறிப்பிட்டு, திமுகவை கடுமையாக விமர்சித்தார். விஜயின் பேச்சு தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. எந்த அளவிற்கு காத்திரமாக அவர் பேசினார் என்பதையும் தாண்டி, அவர் என்ன விஷயத்தை கையிலெடுத்து பேசுகிறார், அவரை காண குவியும் கூட்டம் ஆகியவற்றை அறிய மக்கள் ஆர்வமுடன் இருப்பதை கடந்த இரண்டுவார கால நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இதனிடையே, தனி ஒருவன் படத்தில் கூறப்படும் “உன் எதிரி யார் என்று சொல், நீ யார் என சொல்கிறேன்” என்ற வசனத்தையே விஜய் தீவிரமாக பின்பற்றி வருவதை அவரது பேச்சுகள் உறுதிப்படுத்துகின்றன.
விஜயின் அபார வெற்றி:
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநாடு தொடங்கி, நேற்று திருவாரூரில் நடைபெற்ற பரப்புரை வரையிலும், தங்களது ஒரே எதிரி திமுக தான் என்பதை விஜய் அழுத்தம் திருத்தமாக பேசி வருகிறார். மற்ற கட்சியினர் விமர்சித்தாலும், அதனை புறந்தள்ளிவிட்டு திமுகவின் செயல்பாடுகள், அரசு நிர்வாகத்தின் நடவடிக்கைகளில் உள்ள பிழைகளை சுட்டிக் காட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறார். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல கட்சிகளில் தவெகவும் ஒன்றல்ல, திமுகவிற்கான சரியான மாற்று சக்தியே நாங்கள் தான் என்பதையே உணர்த்த முற்பட்டுள்ளார். அந்த நிலைப்பாட்டை வலுப்படுத்தவே, ஆளுங்கட்சியாகவும், 50 ஆண்டுகளை கடந்து வலுவான கட்டமைப்பை கொண்ட கட்சியாகவும் திகழும் திமுகவை மட்டுமே தனது ஒரே எதிரியாக முன்னிலைப்படுத்தி வருகிறார். இந்த வலுவான எதிரியை எதிர்கொள்வதன் மூலம், தவெகவும் மிகவும் வலுவான கட்சி என்ற பிம்பத்தை படிப்படியாக கட்டமைக்க தொடங்கியுள்ளார்.
லைனில் திமுக அமைச்சர்கள்:
ஆரம்பத்தில் விஜயின் பேச்சு மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிலளிக்க திமுக தரப்பினர் மறுத்தனர். அவர் ஒரு பொருட்டே இல்லை என்ற வகையில் விமர்சித்தனர். ஆனால், நாளுக்கு நாள் விஜயின் அரசியல் பரப்புரை மக்கள் மத்தியில் பேசுபொருளாக, அமைச்சர்கள் வரிசைகட்டி வந்து பதிலடி தர தொடங்கினர். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கூட பெயரை குறிப்பிடாமலேயே, தவெக மற்றும் விஜயை விமர்சித்து வருகின்றனர். திமுகவின் ஐடி-விங்கும் தவெக மீது கூடுதல் கவனத்தை செலுத்தி வருவதை சமூக வலைதளத்தில் இருப்பவர்களால் உணர முடியும். இப்படி ஆளுங்கட்சியின் கோவத்தையும், கவனத்தையும் ஈர்த்தன் மூலம், 2026ல் தவெகவிற்கும், திமுகவிற்கும் தான் போட்டியே என்ற தனது இலக்கில் விஜய் நல்ல முன்னேற்றம் கண்டு இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
சீமானின் பலிக்காத கனவு..
பன்னெடுங்காலமாக ஆண்டு வரும் திராவிட காட்சிகளுக்கு மாற்று நாங்களே என கூக்குரலிட்டு வரும் சீமான், இளைஞர்களின் வாக்குகளை அறுவடை செய்து வந்தார். ஆனால், விஜயின் வருகையால் அவரது வாக்கு வங்கி கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என கூறப்படுகிறது. இதனை உணர்ந்தே, அண்மைக் காலமாக திமுகவை காட்டிலும் தவெகவையும், அதன் தலைவர் விஜயையும் சீமான் கடுமையாக விமர்சித்து வருவதை பார்க்க முடிகிறது. ஆரம்பத்தில் விஜயின் அரசியல் நிலைப்பாட்டை வரவேற்ற சீமானே, தற்போது “உன்னையெல்லாம் யார் அரசியலுக்கு வரச்சொன்னார்கள்” என ஒருமையில் பேசி வருகிறார். இதன் மூலம் தவெக எங்களது நாம் தமிழர் கட்சிக்கு இணையானது அல்ல என நிரூபிப்பதோடு, வரும் தேர்தலில் அவர்களை விட கூடுதல் வாக்குகளை பெற்று விட வேண்டுமென சீமான் தீவிரம் காட்டி வருகிறாராம்.
ஆனால், சீமானின் விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலளித்தால், நாம் ஒரு இரண்டாம் நிலை கட்சி என்ற பிம்பம் கட்டமைக்கப்படும் என விஜய் நன்கு உணர்ந்துள்ளார். அதன் காரணமாகவே ஒருமையிலும், மரியாதைக்குறைவாக பேசினால் கூட சீமானிற்கு பதிலளிக்கவே கூடாது என்பதில் தவெக தலைமை உறுதியாக உள்ளதாம். ஒரே எதிரி திமுக தான் என்ற கொள்கையும் பயணித்து வருகிறது. இதனால், தவெகவின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற சீமானின் திட்டங்கள் பலனில்லாமல் போவதாக ராவணன் குடில் சுற்றுவட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.






















