VCK MLA: "பன்றி இழிவானது அல்ல, அது பூர்வகுடிகளின் அடையாளம்" வி.சி.க. எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன் பேச்சு
பன்றி என்பது இழிவானது அல்ல அது பூர்வகுடி மக்களின் அடையாளம் என்று வி.சி.க. எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன் பேசியுள்ளார்.
காட்டுமன்னார் கோயில் தொகுதி எம்.எல்.ஏ.வான வி.சி.க.வைச் சேர்ந்த சிந்தனைச் செல்வன் சமீபத்தில் யூ டியூப் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பன்றிகள், எருமைகளுக்கும், அப்போது வாழ்ந்த மக்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் பேசியுள்ளார்.
பன்றி, எருமை மீது பண்பாட்டு தாக்குதல்:
எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன் பேசியதாவது, "பன்றி என்பதும், எருமை என்பதும் மிகவும் முக்கியமான விஷயம். இந்த கால்நடைகள் பழங்குடி மக்கள், எளிய மக்கள், பூர்வகுடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இவைகள் மீது மிகப்பெரிய பண்பாட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எருமை என்பது திராவிடர்களின் அடையாளமாகவும், பசுமாடு ஆரியர்களின் அடையாளமாகவும் கருதப்பட்டது. இன்று எருமை வீழ்த்தப்பட்டுள்ளது.
'பன்றி இழிவானது அல்ல , பூர்வக்குடி மக்களின் அடையாளம்'
— Sinthanai Selvan (@sinthanaivck) January 25, 2024
இழிவாக சித்தரிப்பது பண்பாட்டு சிதைவு..#periyar #VCK pic.twitter.com/knpEU4fAh2
தென்னிந்தியாவில் வாழ்ந்த தொன்மையான திராவிடர்கள் எருமையை ஒரு அடையாளமாக கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இந்த பண்பாட்டு அடையாளங்கள் வீழ்த்தப்பட்டு, வெறும் வசைச்சொற்களாக மாறியுள்ளது. நாம் யாரையும் திட்டும்போது கூட போடா பசுமாடு என்று சொல்வது அல்ல. போடா எருமை மாடு என்றுதான் சொல்கிறோம். போடா ஆடு என்று சொல்வது இல்லை. போடா பன்றி என்று சொல்கிறோம்.
மிகப்பெரிய வணிகம்:
அப்போ எருமையும், பன்றியும் ஏன் வசைச்சொற்களாக மாற்றப்பட்டுள்ளது? என்ற கேள்வி வருகிறது. நம் இலக்கியங்களில் பன்றி, ஆடு நம் மக்களால் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது தெரிகிறது. பன்றி வியாபாரம்தான் ஒரு மன்னனுக்கு மிகப்பெரிய அளவில் லாபம், தங்க நாணயங்களை தரும் அளவிற்கு வணிகமாக இருந்தது.
அதன் விளைவுதான் தங்கக்காசுகளின் பன்றிகளின் தலையை போட்டனர். அதனால், அதை வராக என்று கூறுவார்கள். திருவிளையாடல் புராணங்களில் ஆயிரம் வராகம், ஆயிரம் வராகம் என்று கூறுவார்கள். அப்படி என்றால் ஆயிரம் பொற்காசு என்று அர்த்தம். தஞ்சை பெருங்கோயிலை கட்டிய ராஜ ராஜ சோழனின் குலதெய்வம், அந்த பெருங்கோயிலுக்கு மிக அருகில் சிறிய அளவில் உள்ளது. அந்த குலதெய்வம் வராகி அம்மன்.
காரணம் இதுதான்
வராகி என்று சமஸ்கிருதத்தில் கூறினால், அதை நீங்கள் சௌகரியமாக உணர்கிறீர்கள். பன்றி என்று கூறினால் உங்களுக்கு சங்கடமாக உணர்கிறீர்கள். இவற்றை வளர்த்த பூர்வகுடி மக்கள் நிலம் இழந்தார்கள். இதனால், இவர்களின் கால்நடைகளும் இந்த நிலைக்கு வந்துள்ளது. இவற்றை சரியான முறையில் சுத்தமாக வளர்க்க முடிந்தால் மிகப்பெரிய லாபத்தை அது தரும். மிகப்பெரிய நோய் எதிர்ப்பு சக்தியை தரும் உணவாகவும் அவை அமையும்.”
இவ்வாறு அவர் பேசினார்.