(Source: ECI/ABP News/ABP Majha)
TVK Vijay : “தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
அரசியல் விளையாட்டுகளில் எது, எப்போது வேண்டுமனாலும் நடக்கலாம், மாறலாம். இந்த கூட்டணி மாறவே மாறாது என்று யாராலும் ஆருடம் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், இது அரசியல்..!
தமிழ்நாட்டின் 2வது பெரிய அரசியல் சக்தியாக விஜய் உருவெடுக்க வாய்ப்பு உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள கருத்து அரசியல் களத்தில் அடுத்த அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, மது ஒழிப்பு மாநாடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் பேசிய கருத்துகள் சர்ச்சைகளுக்கு வித்திட்டன. பின்னர், அந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லையென்றால் வட மாவட்டங்களில் திமுகவின் வெற்றி சாத்தியப்பட்டிருக்காது எனவும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் என்ன தவறு என்றும் பேசியது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் விஜய், தமிழ்நாட்டின் 2வது சக்தியாக வர வாய்ப்பிருக்கிறது என திருமாவளவன் பேசியுள்ளது தற்போது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
விஜய் பற்றி திருமாவளவன் பேசியது என்ன ?
தமிழ்நாட்டில் 2வது இடத்தை பிடிக்க பாஜக கடும் முயற்சி செய்து வருகிறது. ஆனால், 2026ல் மீண்டும் திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்துவிட்டால், தமிழ்நாட்டில் பாஜக என்ற கட்சி ஒன்றுமே செய்ய முடியாது என்று பேசியுள்ள திருமாவளவன், அதற்கு அடுத்து, விஜய் தமிழ்நாட்டின் 2வது சக்தியாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார்.
விஜயை தொடர்ந்து ஆதரிக்கும் திருமா ? காரணம் என்ன?
விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து சொல்லியது முதல், அவர் பெரியார் திடல் சென்று பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது வரை திருமாவளவன் விஜயை பாராட்டி வருகிறார். முன்னதாக, திருமாவளவனின் பிறந்தநாளுக்கு தொலைபேசி மூலம் விஜய் வாழ்த்துச் சொன்னார். இப்படி விஜயும் திருமாவளவனும் நட்புடன், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துவதும் பாரட்டுவதுமாக அரசியல் களத்தில் இருந்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தியாக விஜய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
திமுகவிற்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் பல தேர்தல்களை சந்தித்த அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இருக்கும் நிலையில், நேரடியாக வரும் 2026 தேர்தலை மட்டுமே சந்திக்கவிருக்கும் விஜய் தமிழ்நாட்டின் 2வது சக்தியாக மாற வாய்ப்பு உள்ளது என்று திருமாவளவன் சொல்லியுள்ள கருத்து விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
விஜயோடு திருமா கூட்டணியா ?
தற்போது திமுகவுடனான கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என்று திருமா சொல்லி வந்தாலும் அவர் 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தே காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. விஜய்க்கு இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் நிலையில், அவருடன் 2026ல் கூட்டணி வைத்து தன்னுடைய முழக்கமான, ”ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்ற கொள்கையை சாத்தியமாக்க திருமா திட்டமிட்டு வருவதாகவும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்கும் விதமாக நடிகர் ரஜினி கட்சித் தொடங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, அது நடக்காமல் போனது. இந்த முறை விஜய் கட்சியையே தொடங்கிவிட்ட நிலையில், அவர் 2026 தேர்தலில் போட்டியிடுவது என்பதும் உறுதியாகிவிட்டது. இந்நிலையில், விஜய் தன்னுடன் – தான் கூட்டணி சேருவார் என்று தொடக்கம் முதலே சீமான் பேசிவந்த நிலையில், தற்போது திருமாவளவன் விஜய்க்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதன்மூலம், திமுக கூட்டணியில் 2026ல் அவர் கேட்கும் தொகுதிகள் கிடைக்கவில்லையெனில் அவர் விஜய் பக்கம் செல்வதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை ; நண்பனும் இல்லை
அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போதும் வேண்டுமானாலும் நடக்கலாம். சொல்லியது சொல்லியபடிதான் நடக்கும் என்றெல்லாம் இங்கு எதுவும் இல்லை. இரவு திமுகவுடன் கூட்டணி என்று அறிவித்துவிட்டு காலை எழுந்தவுடன் அதிமுகவுடன் வைகோ கூட்டணி போட்டது, 2016ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு தடையாக திருமாவளவன் இடம்பெற்ற மக்கள் நலக் கூட்டணி இருந்தது எல்லாம் கடந்த கால வரலாறுகள்.
எனவே, திருமாவளவன் 2026 திமுகவுடனேயே கூட்டணியில் தொடருவார் என்றும் அடித்துச் சொல்லவிடவும் முடியாது. வேறு கட்சியோடு கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திப்பார் என்றும் இப்போதே பேசிவிடவும் முடியாது. திருமாவளவன் சொல்வது மாதிரியே , கூட்டணி முடிவுகள் என்பது தேர்தல் நேரத்தில் எடுக்கப்படவேண்டியது. அப்போது அவர் என்ன மாதிரி முடிவு எடுக்கப்போகிறார் என்பதை இப்போதே யாராலும் சொல்ல முடியாது.
ஆனால், அரசியல் விளையாட்டுகளில் எது, எப்போது வேண்டுமனாலும் நடக்கலாம், மாறலாம். இந்த கூட்டணி மாறவே மாறாது என்று யாராலும் ஆருடம் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், இது அரசியல். திமுகவுடனேயே விடுதலை சிறுத்தைகள் 2026ல் பயணிக்கலாம் அல்லது விஜயுடனோ அல்லது வேறு கட்சிகளுடன் சேர்ந்தோ திருமாவளவன் தேர்தலை சந்திக்கலாம்.