Anbumani Ramadoss: பட்டியல் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு..! வன்னியர் சங்க மாநாட்டில் அன்புமணி ...
Vanniyar Sangam Manadu: "வன்னியர் சங்க மாநாட்டில் பட்டியல் சமுதாயத்திற்கு கூடுதலாக இரண்டு சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

வன்னியர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா மாநாடு நடத்தப்படுவது வழக்கம். 1988 இலிருந்து 20 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த நிலையில் 2013-ல் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் 21-வது ஆண்டாக நடைபெற்றது.
வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து..
லட்சக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்தும் மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வன்னிய சங்கத்தை சேர்ந்தவர்கள் சிறப்பு அழைப்பாளராக வரவழைக்கப்பட்டிருந்தனர்.
மாநாட்டுக்கு வரும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள் மாநாட்டு திடலுக்குள் வர முடியாமல் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திலேயே நிறுத்தப்பட்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நடந்தே மாநாட்டு திடலுக்கு சாரை சாரையாக வந்து சேர்ந்தனர்..
பிரத்தியேக ட்ரோன் ஷோ
மாலை நான்கு முப்பது மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது. அதில் வன்னியர் சங்கம் உருவான வரலாறு மற்றும் சித்திரை பெருவிழா மாநாடு தொடர்பான பாடல் உள்ளிட்டவற்றுக்கு நடனங்கள் ஆடி கலை குழுவினர் அசத்தினர். பிறகு முன்னாள் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு, சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள், மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரின் படங்கள் வானில் ட்ரோன் ஷோ மூலமாக நிகழ்த்திக் காட்டப்பட்டது. நூற்றுக்கணக்கான பிரோன்களை பயன்படுத்தி பல்வேறு தலைவர்களின் புகைப்படங்கள் வானில் தோன்ற வைத்து அசத்தப்பட்டது அதனைக் கண்ட கூட்டத்தினர் ஆர்ப்பரித்து கைதட்டினர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
அனைத்து சமுதாயங்களுக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை இணையாக வழங்க வேண்டும். பட்டியல் சமுதாய மக்களுக்கு 18 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில் இரண்டு சதவீதம் உயர்த்தி 20%சதவீதமாக வழங்க வேண்டும்.தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் போராடி சாதித்த மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு பாராட்டும், நன்றியும் என திருமணம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ் பேச்சு:
என்னுடைய அண்ணன் காடுவெட்டி குரு இந்த மாநாட்டில் இல்லை என்று எனக்கு வருத்தம். இன்று மட்டும் காடுவெட்டி குரு இருந்திருந்தால் மற்றவர்கள் போல நானும் தம்பிகளோடு அமர்ந்து இருப்பேன். அவருடைய கனவு ஐயா காலத்தில் நாம் ஆள வேண்டும் என்பதுதான்.
திமுக பலமுறை ஆட்சிக்கு வருவதற்கு உதவிய வன்னியர் சமுதாயத்திற்கு திமுக துரோகம் செய்கிறது.1957-ல் திமுக 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது அதில் 14 தொகுதிகள் வன்னியர் அதிகம் வாழும் தொகுதிகள். 1962 ல் திமுக 50 தொகுதிகளில் வெற்றி பெற்றது அதில் 45 தொகுதிகள் வன்னியர் அதிகம் வாழும் தொகுதிகள். 1967 இல் திமுக ஆட்சிக்கு வருகிறது. அப்போது 138 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது அதில் 92 தொகுதிகள் வன்னியர் அதிகம் இருக்கும் தொகுதிகள்...
இப்படி திமுகவை ஒவ்வொரு முறையும் ஆட்சியில் அமர வைத்த சமூகமாக வன்னியர் சமுதாயம் உள்ளது. திமுகவில் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள சமுதாயம் வன்னியர் சமுதாயம். 23 சட்டமன்ற உறுப்பினர்களை திமுகவிற்கு வன்னிய சமுதாயம் தான் கொடுத்துள்ளது. ஆனால் இந்த சமுதாயத்திற்கு கல்வியும் வேலைவாய்ப்பும் கொடுக்க திமுக அரசுக்கு மனமில்லை.
முதல் ஐஏஎஸ் அதிகாரி
சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக வன்னியர் சமுதாயத்தில் இருந்து முதல் ஐஏஎஸ் அதிகாரி வந்துள்ளார். தமிழகத்தில் அதிகமான மக்கள் தொகை கொண்டிருக்கக்கூடிய வன்னியர் சமுதாயம் மிக மிக பின்தங்கிய சமுதாயமாக உள்ளது இதனை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும் ஆனால் முதலமைச்சருக்கு இதைப் பற்றிய எந்த கவலையும் கிடையாது.
வன்னியர் சமுதாயம் மட்டுமல்ல இதே போல ஒடுக்கப்பட்ட வெடிப்பு நிலையில் இருக்கக்கூடிய அனைத்து சமுதாய மக்களையும் முன்னேற்றத்திற்கு கொண்டுவர தமிழக அரசு சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும்...
அன்புமணி சரமாரி கேள்வி
எந்தெந்த சமுதாயங்கள் இட ஒதுக்கீட்டை அதிகம் அனுபவிக்கின்றன இட ஒதுக்கீடு அதிகம் அனுபவிக்காத சமுதாயம் எது என்பதை கண்டறிய வேண்டும். தமிழகத்தில் 377 சமுதாயங்கள் இட ஒதுக்கீட்டால் பயன்பெறுகிறார்கள். இதில் எஸ்.சி எஸ்.டி மக்களுக்கு 19 விழுக்காடு இதில் கிட்டத்தட்ட 114 சமுதாயங்கள் பயன்பெறுகிறார்கள். எஸ்.சி சமுதாயத்தில் மட்டும் உட்பிரிவாக 76 பிரிவுகள் உள்ளது.
ஒரே சதவீதம் கொண்டுள்ள எஸ்.டி-யில் உட்பிரிவாக 34 பிரிவுகள் இருக்கிறார்கள். இவற்றில் எந்தெந்த சமுதாயம் இட ஒதுக்கீட்டை அதிகமாக அனுபவிக்கிறது எந்தெந்த பிரிவுக்கு இன்னும் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்பதை நாம் எப்படி தெரிந்து கொள்வது ? அதற்கு தான் சர்வே எடுக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம். இன்னும் இட ஒதுக்கீட்டை அதிகம் அனுபவிக்காத பிரிவினரை கண்டறிந்து அவர்களுக்கு கூடுதல் சலுகைகள் கொடுத்து முன்னேற்ற வேண்டும்.
அண்ணன் பின்னால் வாருங்கள்
யார் யாரோ பின்னால் நீங்கள் செல்கிறீர்கள் அவர்கள் பின்னால் செல்லாதீர்கள் உங்கள் அண்ணன் என் பின்னால் வாருங்கள். உங்களுக்காக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் மாவீரன் குரு போல நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கு நல்ல படிப்பையும் வேலைவாய்ப்பையும் நான் வாங்கித் தருகிறேன்.
நாம் ஆள வேண்டும் நாம் ஆள வேண்டிய காலம் வந்துவிட்டது. இந்த மண்ணை ஆண்டவர்கள் நாம் இந்த மண்ணின் பூர்வ குடிகள் நாம். வீராணம் ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெலிங்டன் ஏரி மதுராந்தகம் ஏரி வரை வெட்டியது நம்முடைய முன்னோர்கள்.





















