Vanniyar Sangam Manadu: 12 வருடங்களுக்கு பிறகு சித்திரை முழு நிலவு மாநாடு! 'பட்டியல் சமூகத்தினரே வாருங்கள்’ - ராமதாஸ் அழைப்பு
பட்டியல் சமூக தலைவர்கள் மாநாடு நடத்தினால் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்துக்கொள்வார்கள், மாநாட்டிற்கு வரும் பட்டியல் சமூகத்தினரை வாழ்த்து சொல்லி அனுப்புங்கள்- மருத்துவர் ராமதாஸ்

வன்னியர் சங்க சித்திரை முழு நிலவு மாநாடு
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிரதான கட்சிகளாக திமுக மற்றும் அதிமுக இருந்து வருகிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கிடையே நேரடியாக, தேர்தலில் போட்டிகள் நடைபெற்றாலும், அதற்கு அடுத்த இடங்களில் இருக்கும் கட்சிகளின் வாக்குகள் தேர்தல் அரசியலில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக, அரசியல் இயக்கமாக செயல்பட்டு வரும் பாட்டாளி மக்கள் கட்சியும், தமிழ்நாடு தேர்தல் அரசியலில், முக்கிய இடம் வகித்து வருகிறது. பல சமயங்களில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் பாமக , இருந்துள்ளது.
வன்னியர் சங்க மாநாடுகள்
வன்னியர் சங்கத்தை அடிப்படையாக வைத்து துவங்கப்பட்ட கட்சியான பாமக தனது கட்சி தொண்டர்களை, தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, "சித்திரை முழு நிலவு நாளன்று" வன்னியர் சங்க மாநாடுகளை நடத்தி வந்தது. முதலில் பூம்புகார் பகுதியில் வன்னியர் சங்க மாநாடு நடத்தி வந்த பாமக, பிறகு மகாபலிபுரத்தில் வன்னியர் சங்க மாநாடுகளை நடத்தி வந்தது. பல்வேறு காரணங்களுக்காக கடந்த 12 ஆண்டுகளாக மாநாடு நடத்தப்படாமல் இருந்து வருகிறது.
பாமக 2.0
மீண்டும் பாமகவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதற்காக, பாமக 2.0 என்ற திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும், இதன் மூலம் 2026 இல் பாமக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக திட்டம் தீட்டி வருவதாகவும் அன்புமணி கூறி வருகிறார். பாமக தொண்டர்கள் வன்னியர் சங்க மாநாட்டை நடத்த வேண்டும் என தலைவராக பொறுப்பேற்ற அன்புமணியிடம் கோரிக்கை வைத்தனர், இந்த நிலையில் வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு மே 11-ம் தேதி நடைபெறும் என அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டியல் சமூக தலைவர்கள் மாநாடு நடத்தினால் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்துக்கொள்வார்கள்...
வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு மே 11-ம் தேதி பெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், அனைத்து மக்களுக்காக பாடு படுகின்ற கட்சி பாமக. 18 சதவீத இடஒதுக்கீட்டை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம். இப்போதுள்ள பட்டியலின தலைவர்களை கேட்டுக்கொள்வது என்னவெனில் நீங்களும் மாநாட்டில் கலந்துக்கொள்ளுங்கள். பட்டியல் சமூக தலைவர்கள் மாநாடு நடத்தினால் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்துக்கொள்வார்கள். அண்ணா சொன்னது போல் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். மாநாட்டிற்கு வரும் பட்டியல் சமூகத்தினரை வாழ்த்து சொல்லி அனுப்புங்கள். இந்த மாநாடு 364 சமுதாயத்திற்கும் ஒரு செய்தியை சொல்லும். அவர்களுக்கு அரணாக இருக்கும். வன்னியர் மாநாட்டிற்கு நாம் எப்படி செல்வது என யோசிக்காதீர்கள், முடிந்த அளவு நீங்களும் வாருங்கள், 364 சமுதாய மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். நீங்களும் கலந்துக் கொள்ளுங்கள்.
12 ஆண்டுகளுக்கு பிறகு மாநாடு நடைபெறுவதால் கோவில் கும்பாபிஷேகம் போல் நடத்தப்பட வேண்டும்
ஆலோசனை கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும், அதற்க்கு எதிரொலியாக இந்த மாநாடு இருக்க வேண்டும், பாமகவிற்கு யாரும் எதிரி கிடையாது, மாநாடிற்க்கும் வரும் அனைவரும் கட்டுக்கோப்புடன் வர வேண்டும், பாமக நிறுவனர் ராமதாஸ் அனைத்து சமுதாயத்திற்கும் சமமானவர், பிராமனவர் சமுதாயத்திலிருந்து பட்டியலின சமூகம் வரை அனைவருக்கும் சமமானவராக உள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு இடஒதுக்கீடு குறித்த பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளது, 12 ஆண்டுகளுக்கு பிறகு மாநாடு நடைபெறுவதால் கோவில் கும்பாபிஷேகம் போல் நடத்தப்பட வேண்டும் என பேசினார்.
இத்தகைய சூழலில் வன்னியர் சங்க சித்திரை முழு நிலவு மாநாடு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பாமக தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி தலைமையில் முதல்முறையாக நடைபெற உள்ளது, இந்த மாநாடு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கூட்டணி ஆட்சியில் முக்கிய பங்காக பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் என்ற குறிக்கோளுடன் அன்புமணி ஒவ்வொரு நகர்வையும் தீவிரமாக ஆலோசித்து நடத்தி வருகிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

