''ஒன்றியம்னு சொன்னேன்.. ஆனா மத்திய அரசை சொல்லல'' - புதுச்சேரி பொறுப்பு ஆளுநர் புதிய விளக்கம்
ஒன்றிய அரசு என்ற சொல் மத்திய அரசை குறிக்கவில்லை புதுச்சேரி அரசைதான் ஒன்றிய அரசு என குறிப்பிட்டதாக என்ற புதிய விளக்கம் ஒன்றை புதுச்சேரி பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மத்திய அரசு என்று சொல்வதற்கு பதிலாக ஒன்றிய அரசு என சொல்லி வருவது தமிழக பாஜகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. ஒன்றிய அரசு என சொல்பவர்கள் மீது வழக்கு தொடருவோம் என பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கூறியிருந்தார். மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? என சட்டமன்றத்திலேயே பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஒன்றிய அரசு என்ற சொல்லைத்தான் சொல்கிறோமே தவிர சட்டத்திற்கு புறம்பாக எதையும் சொல்லவில்லை எனவும் ஒன்றிய அரசு என்ற சொல்லை கேட்டு யாரும் மிரள வேண்டாம் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அமைச்சரவை நேற்று முன் தினம் பதவியேற்றது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த புதுச்சேரியின் பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன், இந்திய ஒன்றியம் என்ற சொல்லை பயன்படுத்தி முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பாஜக சார்பில் ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்தரராஜனே ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்துவதாக வீடியோ சமூகவலைத்தளங்களில் நேற்று வைரல் ஆனது. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள புதுச்சேரி பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்,
''தான் ஒன்றிய அரசு என குறிப்பிட்டது மத்திய அரசை இல்லை என்றும் புதுச்சேரி அரசைதான் ஒன்றிய அரசு என குறிப்பிட்டதாகவும் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சி பரப்பு என்பது புதுச்சேரி தமிழறிஞர்களால் மொழிப்பெயர்கப்பட்டு சட்டமாக்கப்பட்டதாகவும், பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு பின் இந்திய ஆட்சிக்கு உட்பட்டதால் INDIAN UNION TERRITORY என புதுச்சேரியை அழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.