TVK Vijay: “மறைமுக கூட்டு, நேரடி நிர்பந்தக் கூட்டு“.. திமுக, அதிமுக, பாஜக-வை வெளுத்துவிட்ட விஜய்...
அதிமுக-பாஜக இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளையும் விளாசி, அறிக்கை வெளியிட்டுள்ளார் விஜய்.

தமிழ்நாட்டில் மிகவும் எதிர்பார்ப்பில் இருந்த அரசியல் நகர்வாக, அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி நேற்று உறுதி செய்யப்பட்டடு, அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளையும் குற்றம்சாட்டி, தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில் விஜய் கூறியுள்ளது என்ன.?
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் விரோத மறைமுக கூட்டுக் கணக்குகளுக்கும், மக்களால் நிராகரிப்பட்ட நேரடி நிர்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறியப்போவது உறுதி என தெரிவித்துள்ளார்.
இதில், திமுகவை விமர்சித்துள்ள அவர், மத்தியில் ஆளும் பிளவுவாத பாஜகவும், மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தின் ஊற்றுக்கண் திமுகவும் வெளியில் கொள்கைப் பகையாளிகள் போல் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் அவர்கள் மறைமுக உறவுக்காரர்கள் என்று கூறியுள்ளார்.
மற்ற மாநிலங்களில் ஊழல் செய்தவர்கள் முதலமைச்சரே ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும்போது, அவர் டெல்லி சென்று வந்தால், அவர் மீதான நடவடிக்கையில் சுணக்கத்தை ஏற்படுத்தி, அவர் எந்த ஊழலும் செய்யாதவர் போல் நடமாடுவதை இந்த நாடே அறியும் என்றும், அதன் மூலம் பாஜகவும் திமுகவும் மறைமுகக் கூட்டு என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளதாகவும் விஜய் விமர்சித்துள்ளார்.
இப்படி, திமுகவை முறைமுகக் கூட்டாக ஏற்கனவே தயார் செய்துவிட்ட நிலையில், பழைய பங்காளியான அதிமுகவை பகிரங்க கூட்டாளியாக பாஜக மீண்டும் கைப்பிடித்துள்ளதில் ஆச்சர்யம் இல்லை என்றும், பிளவுவாத சக்திகளுக்கு சாமரம் வீசியதாலேயே, ஏற்கனவே 3 முறை தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நிர்பந்த கூட்டணியே தற்போது ஏற்பட்டுள்ளதாக விஜய் சாடியுள்ளார்.
“மறைமுக, நேரடி கூட்டுக் கணக்குகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்“
தேர்தலின்போது இவ்விரு கட்சிகளும் நாடகங்களை நடத்துவார்கள் என்றும், ஆனால் மக்கள் விழித்துக்கொண்டதால், அவர்களின் நாடகம் எடுபடாது என்றும் விஜய் கூறியுள்ளார். தங்கள் வீட்டுப் பிள்ளையாக தற்போது தவெக-வையே மக்கள் நினைப்பதாகவும், 2026-ல் மக்களுக்கு எதிரான, மக்களாட்சிக்கு எதிரான தீய சக்திகளை எதிர்த்து நின்று, களமாடி வெல்லப் போவது தமிழக வெற்றிக் கழகம்தான் என விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில், மறைமுக கூட்டு, நேரடி கூட்டுக் கணக்குகளுக்கு தகுந்த பாடம் புகட்டி, மக்கள் அவர்களை விரட்டியடித்து, தூக்கி எறியப் போவது உறுதி எனவும் விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.






















