TVK Manadu: போட்டி போட்டு செலவு செய்யும் நிர்வாகிகள்.. இளைஞர்களை ஆபத்தில் தள்ளுகிறாரா விஜய் ?
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாக இருப்பதால், எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பது கூட தெரியாமல் அதிக அளவு செலவு செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய் தென் இந்திய திரையுலகை தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே, தெரிந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். நடிகர் விஜய் ஒரு திரைப்படத்திற்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாகவும் ஒரு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் திரையுலகின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் சூழலில் தான், அதனை விட்டு முழுவதுமாக விலகி தனது அரசியல் பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார்.
அரசியலுக்கு வந்த விஜய்
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்குவதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலே தங்களது இலக்கு எனவும் விஜய் அறிவித்தார். அடுத்தடுத்து கட்சிக் கொடி, கட்சிக்கான பாடலையும் வெளியிட்டார். இந்நிலையில் தான், வரும் 27ம் தேதி தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது.
தவெக மாநாடு அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மாநாடு நுழைவாயிலில் கோட்டையின் மதில் சுவர் வடிவில் அமைக்கப்பட்டு அதில் இரண்டு யானைகள் இருபுறமும் பிளிரும் வகையில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் மேடையின் இடது புறம் அருகே வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், காமராஜர், பெரியார் மற்றும் விஜய் இவர்களின் 50அடி கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது, வலதுபுறம் தமிழன்னை, சேரர், சோழர், பாண்டியர் மற்றும் விஜய் இவர்களின் 50அடி கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பெரும் தலைவர்கள் கட் அவுட் இடம்பெறும் முதல் மாநாடாக இந்த தமிழக வெற்றி கழக மாநாடு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நிலை என்ன ?
தமிழ்நாடு முழுவதும் ஓரளவிற்கு விஜய் மக்கள் இயக்கமாக இருந்தபோது, அமைப்பை வலுப்படுத்தி கிளைகள் தொடங்கப்பட்டது. கிளைக்கு என்று பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பெயர் பலகைகள் திறக்கப்பட்டு இருந்தது. தற்போது கட்சியாக மாறியுள்ள நிலையில், ரசிகர் மன்றமாக இருந்த கிளைகளை தற்போது கட்சி அமைப்பாக மாற்றப்பட்டு வருகிறது.
தொடர் விளம்பரங்கள்
இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் தங்கள் பகுதிகளில் மாநாடு தொடர்பான விளம்பரங்களை செய்து வந்தனர். முதற்கட்டமாக சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில், கிராமம் மற்றும் நகர் பகுதியில் என அனைத்து இடங்களிலும் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தது.
அதேபோன்று எந்தெந்த பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அமைப்புகள் இருந்ததோ, அந்தப் பகுதிகளில் பேனர் மூலமாகவும் மாநாடு தொடர்பான விளம்பரங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து விளம்பரங்கள் எவ்வாறு செய்யப்படுகிறது என்பது குறித்து, கட்சி தலைமையும் கண்காணித்து வந்தது.
செலவு செய்யும் நிர்வாகிகள்
தொடர்ந்து மாநாடு தொடர்பான விளம்பரங்களுக்கு நிர்வாகிகள், செலவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று மாநாட்டிற்கு பொதுமக்களை அழைத்து வருவதற்கு, நிர்வாகிகள் தங்கள் சொந்த செலவு செய்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் இருந்து, நிர்வாகிகள் மாநாட்டிற்கு தங்கள் சொந்த செலவில் பொதுமக்களை அழைத்து வருகின்றனர்.
செலவு செய்யும் இளைஞர்கள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாக இருப்பதால், எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பது கூட தெரியாமல் அதிக அளவு செலவு செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய கட்சிகள் என்றால் ஏற்கனவே பதவியில் இருந்த நபர்கள்தான் அதிகளவு செலவு செய்வார்கள். ஆனால் இளைஞர்கள் என்பதால் போட்டி போட்டுக் கொண்டு, யார் பெரியவர் என வெளிய காட்டிக் கொள்வதற்காக சிலர் கடன் வாங்கி செலவு செய்வதாகவும், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மாநாடு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பின் ஒருவர் புஸ்ஸி ஆனந்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது எனது சகோதரர் தங்கதுரை, விஜய் ரசிகராகவும், அவரது ரசிகர் மன்ற நிர்வாகியாகவும் ஆரம்ப காலம் முதல் இருக்கிறார். அந்த மன்றமே எங்களது நேம் போர்டில் (Name Board) தான் செயல்படுகிறது. ஆனால், எனது சகோதருக்கு உரிய முக்கியத்துவம் தராமல் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்துள்ளனர். உங்களால் தற்போது நாங்கள் குடும்பத்தோடு தெருவில் நிற்கிறோம் என்று ஆவேசமாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.