TVK Vijay: மீண்டும் எஸ்.ஏ.சி உடன் இணைந்த விஜய்; குதூகலத்தில் த.வெ.க., தொண்டர்கள்!
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி பின்னர் தனது பெற்றோர்களான இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபாவை இன்று அதாவது மே மாதம 27ஆம் தேதி சந்தித்தார். இது தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய் தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில், இன்று தனது பெற்றோர்களைச் சந்தித்துள்ளார்.
நடிகர் விஜய் பல ஆண்டுகளாகவே நேரடி அரசியலில் களமிறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருந்தது. இந்நிலையில் கட்சி தொடங்குவது தொடர்பாக விஜய்க்கும் அவரது தந்தையுமான இயக்குநர் எஸ்.ஏ. சந்திர சேகருக்கும் இடையில் ஒரு சில கருத்து மோதல்கள் இருந்து வந்தது. இதனால் இருவரும் சரியாக பேசிக்கொள்ளாமல் ஒருவரையொருவர் தவிர்த்து வந்தனர். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் கூட நடிகர் விஜய் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திர சேகரைக் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகின்றது.
மேலும் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர், எஸ்.ஏ. சந்திர சேகர் விஜய் குறித்து சில சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டு இருந்தார். தந்தை சந்திர சேகருடன் சரியாக பேசவில்லை என்றாலும், தாயார் ஷோபாவுடன் தொடர்ந்து சந்திப்பது, அவருடன் நேரம் செலவிடுவது, அவருக்கு வேண்டியவற்றை செய்து கொடுத்து வந்தார் விஜய். சமீபத்தில் கூட சென்னையை அடுத்துள்ள கொரட்டூரில் நடிகர் விஜய் தனது தாயாருக்காக சாய் பாபா கோவிலைக் கட்டினார். இது தொடர்பான செய்திகளும் புகைப்படங்களும் ஏற்கனவே வெளியாகி இருந்தது.
View this post on Instagram
இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், தனது பெற்றோர்களை இன்று சந்தித்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திர சேகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.