’விஜயை சுற்றி வளையம் - நெருங்கவிடா நெருப்பு’ யார் இந்த மூவர் கூடம்..?
'பிராமணரான கட்சியின் பொருளாளர் வெங்கடராமனை கட்சியை விட்டு நீக்க, அவரை ஆர்.எஸ்.எஸ். அடிவருடி, பாஜக ஸ்லீப்பர் செல் என்று விஜயிடம் கூறி, மூளைச் சலவை செய்து வருகிறது மூவர் கூடம்’

திரைத்துறையை ஒதுக்கித் தள்ளிவிட்டு அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த நாள் முதல் நாளொருமேனி, பொழுதொரு வண்ணமாக, ஏகப்பட சிக்கல்களை சந்தித்து வருகிறார் விஜய். இப்போது மூவர் அணி மூலம் அவருக்கு முக்கோண சிக்கல் ஏற்பட்டுள்ளது. மூவர் அணியின் ஆதிக்கத்தை தாண்டி, விஜயை அணுக முடியாமல் பிற முக்கிய நிர்வாகிகளே பேயடைத்த மாதிரி, வாயடைத்து போய் நிற்கிறார்கள்.
யார் அந்த மூவர் அணி?
தங்களை தாண்டி கட்சியில் யாரும் வளர்ந்துவிடக்கூடாது, வெளியில் தெரிந்துவிடக் கூடாது, விஜயிடம் நல்ல பெயரை வாங்கிவிடக் கூடாது என்று கங்கணம் கட்டியுள்ளவர்கள் மூன்று பேர். அது கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜயின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, இன்னொருவர் விஜயின் மேனேஜரும் கட்சியின் பொறுப்பாளருமான ஜெகதீஷ் பழனிசாமி. இந்த மூவர் கூடத்தால், கொத்தனார் மாதிரி ஒவ்வொரு செங்கல்லாய் எடுத்து வைத்து கட்சியை கட்டமைக்க முயற்சிக்கும் நிர்வாகிகள் கலங்கி போயிருக்கின்றனர்.
கஜானா வெங்கடராமானை காலிச் செய்ய கங்கணம்
இதே மூவர் கூடத்தினர் கட்சியின் தற்போதைய கஜானாவாக இருக்கும், பொருளாளர் வெங்கடாராமனையும் காலி செய்யும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பிராமணராக உள்ள வெங்கடராமனை ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆகியோரின் கைக் கூலி என்றும் விஜயை இந்த மூவர் கூடம் மூளைச் சலவை செய்து, வெங்கடராமனுக்கு பதில் தங்களுக்கு தோதான ஒரு தொழிலபதிரை பொருளாளராக நியமிக்க புஸ்ஸி, ஜான், ஜெகதீஷ் அடங்கிய குழு வேலை செய்து வருகிறது என்று த..வெ.க வட்டாரத்தில் இருந்து பரபரப்பு தகவல் கிடைத்திருக்கிறது.
ஜான் – ஆதவ் இடையே ஈகோ யுத்தம்
இதுமட்டுமின்றி விஜயின் ஆலோசகராக உள்ள ஜான் ஆரோக்கியசாமி – ஆதவ் அர்ஜூனா இடையே பகை மேகம் சூழ்ந்துள்ளதால் எப்போது வேண்டுமனாலும் அது வெடிக்கலாம் என்ற நிலை இருக்கிறது. குறிப்பாக, பூத் கமிட்டி மற்றும் மாநாடு பணிகளை ஒருங்கிணைப்பதில் ஆதவ் அர்ஜூனா – ஜான் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. நீ பெரிய ஆளா ? இல்லை நான் பெரிய ஆளா? என்ற போட்டி நடைபெற்று வரும் நிலையில், மாநாடு தொடர்பாக கட்சி தலைவர் விஜயை சந்திக்கச் சென்ற ஆதவ் அர்ஜூனாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதை பெரும் அவமானமாக கருதும் ஆதவ் அர்ஜூனா, இதற்கெல்லாம் ஜான் ஆரோக்கியசாமிதான் காரணம் என அவர் மீது கடும் கொந்தளிப்பில் இருக்கிறார். கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் சிடிஆர் நிர்மல்குமாருக்கும் இந்த மூவர் கூடத்தால் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.
ஜக்கம்மா சொல்றா, ஜக்கம்மா சொல்றா
விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் படப்பிடிப்பு பணிகள் 95 சதவீதம் முடிந்தவிட்ட நிலையில், கட்சி பணிகளில் இனிமேல் கவனம் செலுத்த அவர் முடிவெடுத்திருக்கிறார் .ஆனால், இந்த மூவர் கூடத்தின் செயல்பட்டால், யார் சொல்வது சரி? யார் சொல்வது தவறு ? என்பதை கணிக்க முடியாமல் அவரும் திணறி வரும் நிலையில், விரைவில் அடுத்தது 234 தொகுதிகளிலும் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவை விஜய் நடத்த உள்ளார். பின்னர், வடக்கு மண்டல பூத் கமிட்டி கூட்டத்தை கடலூரில் நடத்தவிருக்கிறார்.
இதுமட்டுமின்றி ஜூலை 2வது வாரத்தில் திருச்சியில் 2வது மாநில மாநாட்டையும் நடத்த விஜய் திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கான முடிவுகள் நேரம், தேதி ஆகியவற்றை ஜோதிடரிடன் ஆலோசனைப் படியே புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டு வருகிறார்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை கொள்கைத் தலைவராக அறிவித்துவிட்டு, ஜோசியர் குறித்துக் கொடுப்பதை வைத்து கூட்டங்களை நடத்துவதை கட்சி நிர்வாகிகளே விரும்பவில்லை. இது வெளியில் தெரிந்தால் எல்லோரும் ‘கெக்கபெக்கே’ என சிரிப்பார்கள் என்பதால் மூவர் கூடத்தினர் இதனை அமுக்கி வாசிப்பதாக கூறப்படுகிறது.
ஆதவ் – ஜான்க்கு எதிராக திரி கொளுத்திய பிரசாந்த் கிஷோர்
தமிழக வெற்றிக் கழகத்திற்கு கவுரவ ஆலோசகராக செயல்பட்டு வரும் ’அதிபுத்திசாலியாக’ கருதப்படும் பிரசாந்த் கிஷோர், சமீபத்தில் விஜய்க்கு ஒரு நீண்ட நோட் போட்டிருக்கிறார். அதில், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ள பிரசாந்த் கிஷோர், இதேபோன்று அவர்கள் செயல்பட்டால், 2026ல் உங்களை ‘முட்டு சந்தை’ நோக்கித்தான் அழைத்துச் செல்வார்கள் என எச்சரித்துள்ளார். இதனையறிந்த ஒரு உறையில் உள்ள இரு கத்திகளான ஆதவும் ஜானும் கடும் அதிருப்தியடைந்து அச்சத்துடன் கையை பிசைந்து வருகின்றனர்.
PK அணியை கபளீகரம் செய்த ஆதவ்
இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது பணியாளர் அபூர்வா மூலம் TVK கட்சிக்காக பணி செய்ய 59 நபர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டனர். ஐபேக் ஊழியர்களை கொண்ட Simple Sense என்ற நிறுவனம் மூலம் எடுக்கப்பட்ட இந்த 59 நபர்களுக்கான ஊதியத்தை ஆதவ் அர்ஜூனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் வழங்குவதாக இருந்தது. ஆனால், தனக்கு எதிராகவே விஜயிடம் பிரசாந்த் கிஷோர் நோட் ‘போட்டு’ கொடுத்துவிட்டதை தாங்கிக் கொள்ள முடியாத ஆதவ் அர்ஜூனா, அந்த டீமில் எடுக்கப்பட்ட அப்பாவி இளைஞர்கள் 34 பேரை ஒரே இரவில் வேலையை விட்டு அனுப்பியிருக்கிறார். நீக்கப்பட்டவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கவில்லையெனில் விஜயின் வீட்டை முற்றுகையிடவும் திட்டமிட்டு வருகின்றார்கள்





















