TVK Vijay: பெருமை பேசுவது மட்டும் போதாது! சாதிவாரி கணக்கெடுப்பில் தயக்கம் ஏன்? விஜய் கேள்வி!
TVK Vijay Caste Wise Census: சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் தயக்கம் காட்டுவது ஏன் என த.வெ.க. தலைவர் விஜய் தமிழநாடு அரசை விமர்சித்துள்ளார்.

ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் கலைகிறது; ஆட்சியாளர்கள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை செயல்படுத்துவதில் தயக்கம் காட்டுவது ஏன் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுமக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம உரிமை கிடைக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் ஆட்சியளார்களை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் 'ஆட்சியாளர்களின் 'சமூக நீதி வேடம்' கலைகிறது’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:
”சுதந்திர இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், இந்தியா முழுமைக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக 2021ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பைச் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக் கொள்கைத் திருவிழாவான முதல் மாநில மாநாட்டில், சமூக நீதியைப் பின்பற்றும் மண்ணான தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நான் ஆணித்தரமாக வலியுறுத்தி இருந்தேன். மாநாட்டிற்குப் பிறகு நடைபெற்ற கழகத்தின் செயற்குழுக் கூட்டத்திலும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் செயல்படுத்துவதில் தயக்கம் ஏன்?
” இந்த விவகாரத்தில், மாநில அரசுகளும் தங்களது மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழியிருக்கிறது. எனவேதான், பீகார் மாநில அரசும் கர்நாடக மாநில அரசும் ஏற்கெனவே சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்து, புள்ளிவிவரங்களைக் கையில் வைத்துள்ளன. மேலும், தற்போது தெலுங்கானா மாநில அரசும் வெறும் ஐம்பதே நாட்களில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வை (Caste Survey) நடத்தி முடித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சில திட்டங்களை, மற்ற மாநில அரசுகள் பின்பற்றுகின்றன என்று தமிழக ஆட்சியாளர்கள் பெருமை பேசுகின்றனர். ஆனால். சமூக நீதிக்கு அடித்தளம் அமைக்கும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்த மற்ற மாநிலங்களைப் பின்பற்றத் தயங்குவது ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை.
இத்தனைக்குப் பிறகும். தமிழகத்தை ஆளும் தற்போதைய ஆட்சியாளர்கள் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வைக்கூட நடத்தாமல், தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே வருகிறார்கள்.” என்று தமிழ்நாடு அரசை விமர்சித்துள்ளார்.
— TVK Vijay (@tvkvijayhq) February 6, 2025
சுயலாபத்திற்காக பெரியார் பெயரை பயன்படுத்துவது..
தமிழ்நாடு அரசு சுயநலத்திற்காக பெரியார் பெயரை பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். அவர் அறிக்கையில், “ அரசியல் சாசனத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரக் காரணமாக இருந்த போராட்டத்தை நடத்தி, இட ஒதுக்கீடு விஷயத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டியவர்தான் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியார்.
”பெரியாரே எங்கள் தலைவர் தலைவர்களுக்கு எல்லாம் தலைவர்” என்று சூழலுக்கு ஏற்றவாறு தாங்களின் சுயலாபத்திற்காக மட்டுமே அவரைப் பற்றிப் பெருமை பேசும் தற்போதைய ஆட்சியாளர்கள், சமூக நீதியைக் காக்கும் செயல்பாடான சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்ற வாதத்தையே முன்வைத்து வருகின்றனர். சாதிவாரிக் கணக்கெடுப்பைத்தான் ஒன்றிய அரசு நடத்த வேண்டும். ஆனால், அதற்கு முன்னோட்டமாகத் திகழும் Caste Survey என்ற ஆய்வை மாநில அரசே நடத்தலாமே? அதற்கும் தங்களிடம் அதிகாரம் இல்லை என்று தற்போதைய ஆட்சியாளர்கள் சொல்லப் போகிறார்களா? அப்படியெனில், நெலுங்கானா மாநில அரசுக்கு மட்டும் அது சாத்தியமானது எப்படி? அங்கு சட்டசபையின் சிறப்புக் கூட்டம் கூட்டி, சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பித்து, விவாதம் நடத்துவதும் எப்படி? மற்ற மாநிலங்கள் போல் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வைக்கூட தமிழகத்தில் நடத்தவில்லையே. ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
’எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க...’
”இப்படி, எத்தனைக் கேள்விகள் கேட்டாலும், தற்போதைய ஆட்சியாளர்கள், அவற்றை அலட்சியப் போக்குடன் கடந்து செல்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இந்த நேரத்தில், ஒன்றை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதில் ஒன்றிய மற்றும் தமிழக ஆட்சியாளர்கள் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவர்.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க ஒரே வழியான. உண்மையான சம நீதி, சமத்துவ நீதி. சமூக நீதியை வழங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு முன்னோட்டமாக, அதற்கான ஆய்வை மேற்கொள்ளாமல் இனியும் தாமதித்தால், தற்போதைய ஆட்சியாளர்களின் பொய்வேடம் தானாகவே கலையும் நாள் வெகுதொலைவில் இல்லை.” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

