TVK Maanadu: தவெக மாநாடு! விஜய்யின் டாப் 5 அரசியல் நிலைப்பாடுகள் இதுதான் - ஓர் அலசல்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டில் நடிகர் விஜய் த.வெ.க.வின் நிலைப்பாடாக கூறியுள்ள முக்கியமான 5 கருத்துக்களை கீழே விரிவாக காணலாம்.
![TVK Maanadu: தவெக மாநாடு! விஜய்யின் டாப் 5 அரசியல் நிலைப்பாடுகள் இதுதான் - ஓர் அலசல் TVK Maanadu TVK Leader vijay top 5 political stands know details here TVK Maanadu: தவெக மாநாடு! விஜய்யின் டாப் 5 அரசியல் நிலைப்பாடுகள் இதுதான் - ஓர் அலசல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/28/5e9528388c19aa8e642c8f8a07cbd4851730081237554102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கினார். கட்சியைத் தொடங்கிய பிறகு அவர் எந்தவொரு அரசியல் கருத்துக்களையும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நேற்று நடைபெற்றது.
அதில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், செயல்திட்டங்கள், அரசியல் இலக்கு குறித்து பேசினார். நடிகர் விஜய்யின் நேற்றைய மாநாட்டின் மூலம் அவரது திட்டங்கள் என்ன என்பதை கீழே காணலாம்.
பா.ஜ.க., தி.மு.க.தான் போட்டி:
பிளவுவாத மற்றும் குடும்ப ஆட்சி, திராவிட மாடல் என்று குறிப்பிட்டு பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வே தங்களது கருத்து மற்றும் அரசியல் எதிரி என்று கூறியுள்ளார் விஜய். ஏனென்றால், மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வின் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு உள்ளது. அதேசமயம், ஆளுங்கட்சியான தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய கட்டாயமும் புதியதாக அரசியல் களத்திற்கு வருபவர்களுக்கு உள்ளது. இதன் காரணமாகவே, பா.ஜ.க., தி.மு.க. இரண்டு கட்சிகளும் தங்களது எதிரி என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.
பெரியார் வழிகாட்டி; கடவுள் நம்பிக்கை உண்டு:
பெரியாரின் கொள்கைகளை ஏற்கிறோம். ஆனால் அவரின் கடவுள் மறுப்பு கொள்கைகளை மட்டும் ஏற்கவில்லை. எங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்று கூறி பெரியார் கொள்கைகளை பின்பற்றுபவர்களையும், கடவுள் நம்பிக்கை இருப்பவர்களையும் த.வெ.க. பக்கம் அரவணைக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளார்.
திராவிடம், தேசியமும்:
திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் என்று விஜய் கூறியிருந்தார். தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக திராவிடம் – தமிழ் தேசியம் இடையேயான கருத்து மோதல் வலுவாக உள்ளது. ஆனால், அரசியல் களத்தில் வெற்றி பெற இரண்டு தரப்பினரின் ஆதரவும் மிக மிக முக்கியம். இதில் ஏதேனும் ஒரு தரப்பிற்கு ஆதரவு தெரிவித்தாலும் வாக்குகளை இழக்க நேரிடும் என்பதை புரிந்து கொண்ட விஜய் திராவிடமும், தமிழ் தேசியமும் என் இரு கண்கள் என்று கூறி இரு தரப்பு வாக்குகளையும் கவர வியூகம் வகுத்துள்ளார்.
கூட்டணி உறுதி:
தமிழ்நாட்டில் இனி வரும் காலங்களில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது மிக மிக கடினமான ஒன்றாகும். அதை புரிந்து கொண்ட நடிகர் விஜய் நேற்றைய தனது மாநாட்டிலே நம்மை நம்பி பயணிக்க வருபவர்களுடன் இணைந்து பயணிப்போம் என்று கூட்டணியை உறுதி செய்துள்ளார். தமிழ் தேசியமும், திராவிடமும் எனது இரண்டு கண்கள் என்று கூறியிருப்பதன் மூலம் தமிழ் தேசியத்தை பின்பற்றும் நாம் தமிழருக்கும், திராவிட கொள்கைகளை பின்பற்றும் திராவிட கட்சிகளுக்கும் வெளிப்படையாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு:
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம் திருமாவளவன் கூறிய ஆட்சி, அதிகாரத்தில் பங்கு. இந்த விவகாரம் தி.மு.க. – விசிக இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்படும் என்று கூறி கூட்டணிக்கு வர விசிக-விற்கு மறைமுகமாக அழைப்பு விடுத்ததுடன், மற்ற கட்சியினரையும் கவரும் விதத்தில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)