திருச்சி: புதியதாக நியமிக்கபட்டஅதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசனுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்
அதிமுக திருச்சி மாநகர மாவட்ட செயலாளராக சீனிவாசன் பதவி ஏற்ற பிறகு நடத்திய முதல் கூட்டத்தில் காலியாக இருந்த நாற்காலிகள் மத்தியில் உரையாற்றினார்.
![திருச்சி: புதியதாக நியமிக்கபட்டஅதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசனுக்கு வலுக்கும் எதிர்ப்புகள் Trichy: Opposition to newly appointed AIADMK district secretary Srinivasan is intensifying TNN திருச்சி: புதியதாக நியமிக்கபட்டஅதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசனுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/19/741006500b5cad604df086086be91a5f1697708689671184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அ.தி.மு.க. பொது செயலாளர் ஆகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், பன்னீர்செல்வம் தலைமையில் இன்னொரு அணியாகவும் செயல்பட்டனர். இது தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற நீண்ட சட்டப் போராட்டம் மற்றும் தேர்தல் ஆணைய முடிவுகளில் எடப்பாடி பழனிசாமி அணி வெற்றி பெற்றது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் தேர்தல் ஆணைய தீர்ப்பின்படி அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தற்போது பதவி வகித்து வருகிறார். மேலும், கட்சி பிளவுபட்டபோது திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த வெல்ல மண்டி நடராஜன், ஓ.பி.எஸ். அணி பக்கம் இருப்பதால் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவி நீண்ட காலமாக காலியாக இருந்து வந்தது. இந்த நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆக அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளராக இருந்து வரும் ஜெ.சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இவர் திருச்சி மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் ஆகவும் 4 முறை மாநகராட்சி கவுன்சிலராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க.வில் ஜெயலலிதா பேரவை செயலாளர் உட்பட்ட பல பதவிகளை வகித்து உள்ளார். கட்சியில் ஏற்பட்ட பிளவின்போது இவர் டி.டி.வி. தினகரன் பக்கம் சென்றிருந்தாலும் பின்னர் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்த நிலையில் தற்போது மாநகர் மாவட்ட செயலாளர் பதவி இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 27 ஆம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பிறகு திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு ஏற்ப்பட்டது. நீண்ட காலமாக அதிமுகவில் உண்மையாக உழைத்தவர்களுக்கு பதவி வழங்காமல் மாற்றுக் கட்சியில் சென்று வந்தவற்கு முன்னுரிமை கொடுத்து பதவி தருவது என்பது ஏற்க முடியாத ஒன்றாக இருப்பதாக நிர்வாகிகள் வேதனை தெரிவித்தனர். அதிமுக கட்சியைப் பொருத்தவரை உழைத்தவர்களுக்கு மதிப்பளிக்காமல் பணம் உள்ளவர்களுகே பதவி வழங்குவதாக குற்றம் சாட்டினர்.
திருச்சி மாவட்ட அதிமுகவின் மூத்த, முக்கிய நிர்வாகிகள் சீனிவாசனுக்கு ஆதரவு தரப்போவதில்லை என அதிமுக வட்டாரங்களில் இருந்து தகவல் பரவி வருகிறது. இதன் விளைவாக நேற்று திருச்சி மரைக்கடை பகுதியில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மேடையில் பேசும் போது, காலியாக இருந்த நாற்காலிகளே உதாரணம் என கூறுகிறார்கள். மேலும் இதன் வெளிபாடு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் என அதிமுக வட்டாரங்களில் இருந்து தகவல் பரவி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)