TNElections2021 : காட்பாடி தொகுதியில் துரைமுருகன் பின்னடைவு
TN Assembly Election Results 2021 : கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 20,000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றார்
தமிழகம் உட்பட 5 மாநிலங்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்திய நிலவரப்படி, திமுக கூட்டணி கட்சிகள் 134 தொகுதிகளிலும், அஇஅதிமுக கூட்டணி கட்சிகள் 100 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுக அமோக வெற்றி பெரும் எனத் தெரிவித்திருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் கடும் போட்டி கொண்டாக மாறியுள்ளது.
இந்நிலையில், காட்பாடி தொகுதியில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவை சந்தித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் வி.ராமு முன்னிலையில் உள்ளார்.
காட்பாடி தொகுதி: காட்பாடி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி 1962ல் உருவானது ஆகும். இதன் தொகுதி எண் 40. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குள் அடங்குகிறது. ராணிப்பேட்டை, குடியாத்தம், அணைக்கட்டு, ஆரணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் ஆந்திரப்பிரதேசமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்த தொகுதியில், பொதுவாகவே 70%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின்றன.
இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,19,583, பெண் வாக்காளர்கள் 1,27,813. மூன்றாம் பாலினத்தவர்கள் 32 என மொத்தம் 2,47,428 வாக்காளர்கள் உள்ளனர்.
காட்பாடி தொகுதியில் 1996, 2001, 2006, 2011, 2016 என தொடர்ச்சியாக ஐந்து சட்டமன்றத் தேர்தலில் துரைமுருகன் வெற்றி வேட்பாளாராக உள்ளார். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 20,000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றார். 1996 சட்டமன்றத் தேர்தலில் 40,000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் (காட்பாடி தொகுதியை உள்ளடக்கியது) திமுக வேட்பாளார் ஜெகத்ரட்சகன் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் 3,317 வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். பாமக வேட்பாளர் இதுவரை வாக்குகள் எதுவும் பெறவில்லை. ஆயிரம்விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலன் 3,330 வாக்குகளுடன் முன்னிலையிலும், பாஜக வேட்பாளர் குஷ்பு 1,357 வாக்குகள் பெற்று பின்னடைவில் இருக்கிறார், காரைக்குடியில் பாரதிய ஜனதா வேட்பாளர் ஹெச்.ராஜா பின்னடைவில் உள்ளார்.
கோவிட் தடுப்பு நடவடிக்கை: வாக்கு எண்ணிக்கை மையங்களில் கோவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நோய் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வெற்றி கொண்டாட்டங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.