ADMK : சட்டமன்றத்தில் ஜனநாயக படுகொலை : அ.தி.மு.க. நாளை உண்ணாவிரதப் போராட்டம் - இ.பி.எஸ். அறிவிப்பு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜனநாயக படுகொலை நடந்ததாக குற்றம் சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி நாளை அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும் வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இந்த நிலையில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையை கண்டித்து நாளை சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
முன்னதாக, சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, “அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை ஒரு மனதாக தேர்ந்தெடுத்து சபாநாயகரிடம் கடிதமாக ஒப்படைத்தோம். நாங்கள் கொடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்காமல், ஏற்கனவே துணை தலைவராக இருந்தவரை தொடர வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த இருக்கையில் அமர வைத்து இருக்கிறார்கள். நியாயமாக, நடுநிலையோடு செயல்படக்கூடிய செயலை செய்யாமல், சபாநாயகர் அரசியல் ரீதியாக செயல்படுவதாக பார்க்கிறோம்.
திமுக தலைவர் ஆலோசனைபடியே சபாநாயகர் செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம். அதிமுகவை எதிர்கொள்ள முடியாத திமுக தலைவர் சட்டமன்ற சபாநாயகர் மூலமாக எங்களை பழிவாங்க நினைக்கிறார். சட்டமன்றம் என்பது வேறு, கட்சி என்பது வேறு, ஒரு சட்டமன்றத்திலே அதிமான சட்டமன்ற உறுப்பினர்கள் யாரை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ, அவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதுதான் நடைமுறை.
அதேபோல், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும், எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும், அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களே அந்த பதவி வகிப்பதே அது மரபு. அந்த மரபு, மாண்பு நிராகரிக்கப்பட்டுள்ளது சட்டப்பேரவையில். இதைதான் நாங்கள் நீதிக்கேட்டோம்.
என்னுடைய மூத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் இதுகுறித்து இன்று காலை 9.15 மணியளவில் சட்டப்பேரவை தலைவர் அலுவலகத்திற்கு சென்று எங்களுடைய கருத்துகளை நியாயமாக தெரிவித்தோம். அதன் அடிப்படையில் என்னுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை தலைவர், துணை செயலாளர்களை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
ஆனால் அவர் எங்களுக்கு முறையான பதிலை தெரிவிக்கவில்லை. அதற்கு மாறாக அவர் சட்டமன்றத்தில் கருத்து தெரிவிக்கின்றார். அதுமட்டுமின்றி, பேரவை அவைத்தலைவர் எழுந்து கேள்வி நேரம் முடிந்து நீங்கள் செல்லலாம் என்றார். ” என தெரிவித்திருந்தார்.