புரிஞ்சிப்பீங்கனு நினைக்கிறேன்.. நெருப்போட விளையாடாதீங்க...பைடனை எச்சரித்த ஷி ஜின்பிங்!
அமெரிக்க, சீன நாடுகளுக்கிடையே பல்வேறு விவகாரங்களில் பதற்றம் நிலவி வரும் நிலையில், நேற்று இரு நாட்டு அதிபர்களும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.
அமெரிக்க, சீன நாடுகளுக்கிடையே பல்வேறு விவகாரங்களில் பதற்றம் நிலவி வரும் நிலையில், நேற்று இரு நாட்டு அதிபர்களும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அப்போது, நெருப்போடு விளையாட வேண்டாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சீன அதிபர் ஷி ஜின்பிங் எச்சரித்துள்ளார். இதுகுறித்த தகவல் சீன அரசு ஊடகத்தில் வெளியாகியுள்ளது.
இணையம் வழியாக நடைபெற்ற இந்த உச்ச மாநாடு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக நடைபெற்றது. அப்போது, சீன நாட்டின் ஓர் அங்கமாக கருதப்படும் தாய்வான் குறித்து இரண்டு நாடுகளும் பேசியுள்ளன. தாய்வான் விவகாரத்தில், இருநாடுகளும் சமீப காலமாகவே வெளிப்படையாகவே மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றன.
இச்சூழலில், இணையம் வழியாக நடைபெற்ற உரையாடலின்போது, "இந்த விவகாரத்தை அமெரிக்க தரப்பு முழுமையாக புரிந்து கொள்ளும் என நம்புகிறேன். தைவான் விவகாரத்தில் சீன அரசு மற்றும் மக்களின் நிலைப்பாடு சீரானது. சீனாவின் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியாகப் பாதுகாப்பது 1.4 பில்லியனுக்கும் அதிகமான சீன மக்களின் உறுதியான விருப்பம்" என பைடனிடம் ஷி ஜின்பிங் பேசியுள்ளார்.
ஒன்றரை ஆண்டுக்கு முன்பு அமெரிக்க அதிபராக பைடன் பொறுப்பேற்றதிலிருந்து, இரு நாட்டு தலைவருக்கிடையே நடைபெறும் ஐந்தாவது பேச்சுவார்த்தை இதுவாகும். அமெரிக்க, சீன நாடுகளுக்கிடையே வர்த்தக போர் நிகழ்ந்து வரும் நிலையில், தைவான் விவகாரத்தில் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது. உலக அரங்கில் இந்த பிரச்னையை மூடி மறைப்பது என்பது சமீப காலமாகவே கடினமாக மாறி வருகிறது.
குறிப்பாக, அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையின் சபாநாயகரான நான்சி பெலோசி, தைவானுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். தனித் தன்மை வாய்ந்த ஜனநாயக அரசை கொண்டுள்ள தைவானுக்கு அமெரிக்க அரசில் முக்கிய பதவியை வகிக்கும் ஒரு தலைவர் செல்வது இருநாடுகளுக்கிடையே பிரச்னையாக வெடித்துள்ளது.
அமெரிக்க அரசின் அலுவலர்கள் தைவானுக்கு அடிக்கடி சென்றாலும், சீன நிலப்பரப்பில் இருந்து ஒரு குறுகிய நீரால் பிரிக்கப்பட்டிருக்கும் தைவானுக்கு, பெலோசி பயணம் மேற்கொள்வது சீனாவுக்கு ஆத்திரத்தை மூட்டியுள்ளது. அமெரிக்க அதிபராக வருவதற்கு அவருக்கு வாய்ப்புள்ளதாலும் அவர் வகிக்கும் பதவியாலும் அவர் ராணுவ போக்குவரத்துடன் தைவானுக்கு செல்லலாம் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, புதன்கிழமை இந்த விவகாரத்தில் எச்சரித்த சீனா, இந்த பயணம் உறுதி செய்யபடவில்லை என்றாலும் திட்டமிட்டபடி இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டால் கடும் விளைவுகளை அமெரிக்க சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்