BJP Meeting: பிரம்மாண்ட பாஜக பொதுக்கூட்டம்: பிரபலங்கள் பேசியது இதுதான்!
மோடி தமிழில் பேசினால், தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் யாரும் இல்லாத நிலை உருவாகும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு.
சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக முக்கிய நிர்வாகிகள் உரையாற்றினர்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்:
தமிழைக் காத்த தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார். சமூகநீதியின் அடையாளமாக திகழ்கிறார். தென்னிந்தியாவை இணைக்கும் விதமாக கடந்த 5 நாட்களாக தொடர்ந்து பிரதமர் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்றார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை:
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து பலமான தலைவர்களுடன் சேலம் வந்துள்ளார். மாற்றத்திற்கான கூட்டணியை உருவாக்கியுள்ளார். இந்த முறை 400க்கும் மேல் என்ற இலக்கை வைத்துள்ளார். ஜூன் 4-ம் தேதி இந்த இலக்கு நிச்சயம் எட்டப்படும். 400 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தாண்டிய தேசிய ஜனநாயக்க் கூட்டணி வெற்றி பெற்று, ஏழைத்தாயின் மகன் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவார். 400 என்பது சாதாரண வார்த்தை இல்லை. அது ஒரு மந்திரச்சொல். அதனால்தான் 3-வது முறையாக டாக்டர் ராமதாஸ் வந்திருக்கிறார். ராமதாஸின் கனவுகளை பிரதமர் மோடி நிறைவேற்றுவார். 400க்கும் மேல் வரும்போது இந்தியாவில் வறுமை ஒழிக்கப்படும். விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடும். ஏழைத் தாயின் வயிற்றில் பிறந்தாலும் அந்த குழந்தைக்கான எதிர்காலம் நிச்சயமாக வரும். குழந்தையிடம் கேட்டால் கூட மீண்டும் மோடி தாத்தா வருவார் என கூறுகிறது. தமிழ்மொழியை கற்றுக் கொள்ள முடியவில்லை என பிரதமர் மோடி வருந்துகிறார். மோடி என்றால் தொழில்நுட்பம். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி நம்மிடம் தமிழில் பேசி வருகிறார். ட்விட்டரில் பிரதமர் பேசுவதை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். மோடி தமிழில் பேசினால், தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் யாரும் இல்லாத நிலை உருவாகும். சாதாரண எல்லா மனிதர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறினார்.
பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு:
இந்த முறை 400-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். தமிழகத்தில் இருந்து அதிக எம்பிக்களை பிரதமர் மோடி எதிர்பார்க்கிறார். மோடிக்கு குடும்பம் இல்லை. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும மோடியின் குடும்பமாக உள்ளது. 28 பைசா பிரதமர் என்று விமர்சிக்கிறார்கள், கடந்த 10 ஆண்டுகளில் 2.80 லட்சம் கோடி திட்டங்கள் தமிழகத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் வாழும் அனைவரின் மீதும் அக்கறை பாசம் கொண்டவராக பிரதமர் உள்ளார். திமுக போல காசு கொடுத்து கூட்டம் பாரதிய ஜனதா கட்சி கூட்டத்திற்கு வருவதில்லை. இந்த தேர்தலில் தமிழகத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறைய பேர் செல்வார்கள் என்று பேசினார்.
பாஜக பிரமுகர் நடிகர் சரத்குமார்:
மத்தியில் மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும். எதிர் கூட்டணியில் யார் தலைவர் என்றே தெரியவில்லை. பிரதமர் வேட்பாளர் யார் என்றே சொல்லாமல் தேர்தலை சந்திக்கிறார்கள். 10 ஆண்டு கால ஆட்சியை குறை கூற ஒன்றுமே இல்லை. ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை. தமிழக மக்களின் மனதில் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறி விஷ விதையை விதைத்து வருகிறார்கள். தமிழகத்தில் மத்திய அரசு திட்டங்கள் நடப்பது கூட மாநில அரசுக்கு தெரியவில்லை. பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு இப்போது ஒத்துக் கொண்டு இருக்கிறார்கள். துண்டுச் சீட்டில் இருப்பது மட்டுமே முதலமைச்சருக்கு தெரிகிறது. பிரதமர் மோடி ஹாட்ரிக் பிரதமராக வரவேண்டும். அதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கூறினார்.