(Source: ECI/ABP News/ABP Majha)
குற்றவாளியை கொண்டாடும் கட்சியுடன் கூட்டணியா? - பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்
காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் தலைவர்கள் போரட்டத்தை முன்னெடுத்தனர்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை தனது சிறப்பு அதிகாரத்தை கொண்டு உச்சநீதிமன்றம் விடுவித்த நிலையில் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வாயில் வெள்ளை துணி கட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் தலைவர்கள் போரட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த நிலையில், ”உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பேரறிவாளன் சந்தித்து பேசினார். அப்போது பேரறிவாளனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டி அணைத்து வரவேற்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் விமர்சனத்திற்குள்ளானது. இந்த நிலையில் ராஜூவ் கொலை குற்றவாளியை போற்றும் திமுக கூட்டணியில் தொடர எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோ.சிற்றரசு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளன் அவர்களைச் சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன்!
— M.K.Stalin (@mkstalin) May 18, 2022
சகோதரர் பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென அவரையும் அற்புதம்மாள் அவர்களையும் கேட்டுக் கொண்டேன். pic.twitter.com/M0sOXsYkop
பேரறிவாளன், விடுதலையை வரவேற்று கொண்டாடிய தி.மு.க உடன் கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருப்பது தனது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை என தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோ.சிற்றரசு இன்று தனது பதவியை ராஜினாமா செய்து, கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரிக்கு அனுப்பியுள்ளார். மேலும் தனது ராஜினமா கடிதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோ.சிற்றரசு தெரிவித்துள்ளார்.
மேலும் பேரறிவாளன் விடுதலையை வரவேற்கக்கூடிய கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதனால் கிராமங்களில் இருக்கக் கூடிய காங்கிரஸ் தொண்டர்கள் 75 % பேர் ராஜினாமா கடிதத்தை தன்னிடம் கொடுத்து உள்ளனர் என்றும் பேரறிவாளன் விடுதலை கொண்டாடக்கூடிய கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருப்பதா, வேண்டாமா என்று தமிழக காங்கிரஸ் தலைமையும், அகில இந்திய காங்கிரஸ் தலைமையும் தெளிவான முடிவை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - 'கொலைகாரர்கள்.. நிரபராதிகள் அல்ல' - பேரறிவாளன் விடுதலையை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்