‛ஆரியர் கையில் நம் தேசம் உள்ளது என்பதற்கு மாரிதாஸ் வழக்கு உதாரணம்’ -இயக்குனர் அமீர்
‛‛யூடியுபர் மாரிதாஸ் விவகாரத்தில் நீதிபதியே வழக்கறிஞராக ஆஜராகி அவரை விடுவித்தது ஆரியர்களின் கையில் நம் தேசம் உள்ளது’’ -இயக்குநர் அமீர்
யூடியூபர் மாரிதாஸ் விவகாரத்தில் நீதிபதியே வழக்கறிஞராக இருந்து அவரை விடுவித்தது ஆரியர்களின் கையில் தேசம் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது என்று திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் நடந்த விழா ஒன்றில் திரைப்பட இயக்குநர் அமீர், கவிஞர் சினேகன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் இயக்குநர் அமீர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் விழாவில் ஒரு அரசியல் நாகரீகத்தை பார்க்க முடிந்தது. தேசிய அளவில் புதுச்சேரிக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கிறது. அந்த தனித்துவம் இன்று நடந்த விழாவில் என்னால் பார்க்க முடிந்தது.
இன்றைய முதல்வரும், முன்னாள் முதல்வரும் ஒரே நிகழ்வுக்கு வரக்கூடிய அரிய நிகழ்வு தேசிய அளவில் எங்கும் நடந்ததாக நினைவில்லை. அப்படிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த அரசியல் நாகரிகம் தமிழகத்திலும் இப்போது தொடங்கி இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால், அதற்கு முன்மாதிரியாக புதுச்சேரி தான் திகழ்ந்திருக்கிறது என்பதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். பாராட்டுகிறேன். தமிழகத்தில் அம்மா உணவகம், அம்மா பெட்ரோல் என்று முந்தைய ஆட்சியில் இருந்தது திமுக ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டிருப்பதை ஒரு அரசியல் நாகரீகத்தை காட்டுகிறது. சமீபத்தில் கூட ஒரு விழாவில் மேடையில் அமர்ந்திருந்த முதல்வர், பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசனை அழைத்து தனது அருகில் அமர வைத்தது மிகச்சிறந்த அரசியல் நாகரிகமாக பார்க்கப்படுகிறது. அந்த அரசியல் நாகரிகம் புதுச்சேரியில் இருந்ததுதான் தொடங்கியது.
தமிழகத்தை விட புதுச்சேரி மிகச்சிறந்த படப்பிடிப்புக்கான தளமாக இருந்தது. ஆனால், தமிழகத்துக்கு இணையான வரி வசூல் என்பது ஏற்புடையது அல்ல. திரைப்படத்தை வணிக ரீதியாக பார்க்கக் கூடாது. அது ஒரு தேசத்தின் அடையாளம், கலை, பண்பாடு. அதன் மூலமாகத்தான் மற்ற நாடுகளுக்கு நாம் அடையாளமாக தெரிவோம். அப்படிப்பட்ட கலையை ஊக்குவிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. அதனால் வரி குறைப்பு என்பது சரியானதாக இருக்கும் பட்சத்தில், அரசு அதில் கவனம் செலுத்தி செய்து கொடுக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை என்றார்.
தொடர்ந்து யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு, நீங்கள் எல்லாம் படித்து பட்டம் வாங்கி உயர் பதவிக்கு வரும்போது அல்லது வாதாடக் கூடிய வழக்கறிஞர்களாக வந்து நிற்கும் போது, அங்கு சட்டம் இயற்றக் கூடிய இடத்தில் ஆரியர்கள் அமந்திருப்பார்கள் என்று பெரியார் கூறியது இன்று நிரூபணமாகி இருக்கிறது. அதனால் நாம் என்னவிதமாக போராட்டத்தை நடத்தினாலும் இறுதியில் நீதிமன்றத்துக்கு சென்று தோற்க கூடிய சூழலாக உருவாகிக் கொண்டிருக்கிறது. நீதிபதி ஒருவரே இங்கு வழக்கறிஞராக இருந்து வாதாடியது பேரதிர்ச்சியாக உள்ளது. நியாயமாக மாரிதாஸ் மீது குற்றம் இல்லை என்று சொன்னால் நிச்சயம் அவரை விடுவிக்கலாம்.
அது நீதிபதிக்கான உரிமை. ஆனால், தெள்ளத்தெளிவாக தான் போட்ட பதிவு தவறு என்று அவரே நீக்கி இருக்கும்போது, நீதிபதி அவருக்கு வழக்கறிஞராக இருந்து வாதாடி விடுவித்தது என்பது ஆரியர்களின் கையில் தேசம் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த நேரத்தில் பெரியாரின் கூற்றை நினைவு படுத்த வேண்டியது அவசியமான இருக்கிறது.’’ இவ்வாறு இயக்குநர் அமீர் தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.