”மன்னிப்பு கேளுங்க ஸ்டாலின்” தமிழ்த்தாய்க்கு அவமானம்? சீறும் தலைவர்கள்
கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சிகள் இரண்டில், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகிய இரண்டும் பாடப்படவில்லை என்று சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த 5ஆம் தேதி கோயம்புத்தூர் சென்ற முதல்வர் ஸ்டாலின், விளாங்குறிச்சியில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் சார்பில் ரூ.158 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு வீட்டு வசதித்துறையின் சார்பில் நில எடுப்பு நடவடிக்கையில் விலக்களிக்கப்பட்டவர்களுக்கு விடுவிப்பு ஆணைகள் வழங்கும் திட்டத்தில் கலந்துகொண்டார். இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலுமே தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் பாடப்படவில்லை.
சர்ச்சையான தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்
திருப்பூரில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. அதை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் கடுமையாகக் கண்டித்தார்.
தொடர்ந்து கடந்த அக்டோபர் 18 அன்று சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் ஆளுநர் தலைமையில் இந்தி விழா நடைபெற்றது. இதில், தமிழ்த்தாய் வாழ்த்தில், திராவிட நல் திருநாடு என்னும் ஒரு வரி விடுபட்டுப் பிழையாகப் பாடப்பட்டது. இதை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோரும் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கடுமையாகச் சாடினர்.
அடுத்த ஒரு வாரத்திலேயே அக்.25 அன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட முதல்வரின் புத்தாய்வுத் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டது. உதயநிதி அதைக் குறிப்பிட்டு மீண்டும் பாடச்சொன்னதும் மீண்டும் பாடினர். ஆனாலும் மீண்டும் தவறு ஏற்பட்டது.
பாஜக, பாமக கண்டனம்
இந்த நிலையில் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகிய இரண்டும் பாடப்படவில்லை. இதற்கு தமிழக பாஜக, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச்.ராஜா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ’’தமிழக அரசு அதிகாரிகளில் எவருக்கும் சரியாக உண்மையிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடத்தெரியவில்லை அதனால் அந்நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் பாடவில்லை என்று அர்த்தம் கொள்வதா? அல்லது தமிழக முதல்வரும் அவர் தலைமையிலான திமுகவும் திராவிட சிந்தனையில் இருப்பதால் தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் திட்டமிட்டு புறக்கணிக்கிறதா? இதில் எது உண்மையோ? அது ஒருபுறம் இருக்கட்டும்.
முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்
ஒரு அரசு நிகழ்ச்சியில் மாநில முதல்வரும், பல்வேறு துறைகளின் அமைச்சர்களும், மாநில அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்களும் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் புறக்கணிக்கப்பட்டு இருப்பது தேச இறையாண்மையை அவமதித்ததற்கு ஒப்பான செயல்.
ஆகவே தமிழக முதல்வர் ஸ்டாலின் நாட்டு மக்கள் அனைவரிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதுமட்டுமல்ல அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடாமல் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணத்தை நாட்டு மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.’’ என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் பதவி வகிக்கத் தகுதியில்லையா?
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி கூறும்போது, சென்னையில் ஆளுநர் பங்கேற்ற சென்னைத் தொலைக்காட்சி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஒரு வரி விடுபட்டிருந்ததை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,’’திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழகத்தின் சட்டத்தை மீறுவதாகும்.
சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்” என்று ஆளுநரை விமர்சித்திருந்தார். இந்த விமர்சனம் தாம் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதை கண்டுகொள்ளாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொருந்துமா? என்பதை அவர்தான் கூற வேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்ட விவகாரத்தில் பொங்கி எழுந்த தமிழ் ஆர்வலர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் இப்போது எங்கே போனார்கள் என்று சமூக வலைதளங்களில் குரல்கள் எழுந்து வருகின்றன.