Tamil Nadu Cabinet: முதல்வர் ஸ்டாலினின் 7 கட்டளைகள்; 10 ஆண்டுகளுக்கு பின் மக்களிடம் நற்பெயர் வாங்க அமைச்சர்களுக்கு ‛டிப்ஸ்’
10 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லாத நிலையில் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சில ‛டிப்ஸ்’ வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் வேகமாக செயல்பட்டு வருகிறார். அத்துடன் அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றது. இதில் அதிமுக 65 இடங்களை கைப்பற்றியது.
ராஜ்பவனில் கடந்த 7ஆம் தேதி எளிமையாக நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஸ்டாலினை தொடர்ந்து, புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
திமுக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று, பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். மேலும், புதிய அமைச்சர்களும் தங்களின் துறைசார்ந்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், அதை செயல்படுத்தியும் வருகிறார். மேலும், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தங்களின் பணிகளை விரைந்து முடிக்கவும் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாடினார். அப்போது, பல்வேறு எச்சரிக்கைகளை அமைச்சர்களுக்கு அவர் விடுத்தார்.
முதல்வர் ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கைகள் என்ன..?
1.அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவர்.
2. அமைச்சர்களின் பி.ஏ.,க்கள் நியமனம் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும்.
3.தொகுதியில் நடைபெறும் பிரச்னைகள் குறித்து நேரடியாக காவல்துறையிடம் தொடர்புகொள்ள கூடாது. காவல்துறை தன்வசம் உள்ளதால் நேரடியாக புகார்களை தன்னிடம் தெரிவிக்க வேண்டும்.
4.கட்சி பிரச்னைகளுக்காகவோ, மற்ற பிரச்னைகளுக்காகவோ காவல்துறைக்கு யாரும் ஃபோன் செய்யவோ நேரில் செல்லவோ கூடாது.
5.துறை சார்ந்த புள்ளி விவரங்களை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.
6.பல எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பில்லாத நிலையில் அமைச்சர்கள் பொறுப்புடன் நடக்க வேண்டும்.
7.10 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லாத நிலையில் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஸ்டாலினின் இந்த 7 கட்டளைகள், தற்போது திமுக அமைச்சர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மூத்த அமைச்சர்கள் பலரும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவுரைகளை அவர்கள் டிப்ஸ் அல்லது எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளவார்கள் என்றே தெரிகிறது. கடந்த காலங்களில் நடந்த கசப்பான அனுபவங்களை தவிர்க்கவும், சட்டம் ஒழுங்கை தனது கட்டுப்பாட்டில் வைக்கவும் முதல்வர் ஸ்டாலின் முனைப்பு காட்டுகிறார் என்று மட்டும் தெரிகிறது.