Annamalai RN Ravi Meeting: ஆளுநர் ரவியுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திடீர் சந்திப்பு; பின்னணி என்ன?
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ரவியை ராஜ்பவனி சந்தித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியைச் சந்திக்க ஆளுநர் மாளிகைக்குச் சென்றுள்ளார். இந்த சந்திப்பில் திமுக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு பட்டியலை ஆளுநரிடம் அண்ணாமலை கொடுவுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கும் அண்ணாமலை, DMK FILES 2 மற்றும் டாஸ்மாக் குறித்த வெள்ளை அறிக்கையை வழங்கவிருப்பதாக தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.
இதற்கு முன்னதாக DMK FILES என்ற பெயரில் திமுகவினரின் சொத்து விவரங்களை பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் பகிரங்கமாக வெளியிட்டார். இது தமிழ்நாடு அரசியல் தளத்தில் பெரும் பேசுபொளானது. ஆனால், இப்படியான செய்தி எதுவும் உண்மை இல்லை எனக்கூறி உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல திமுகவினர் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதுடன், மானநஷ்ட வழக்கும் தொடர்வதாக அறிவித்தனர்.
முதல் DMK FILES வெளியிட்டபோது இதன் இரண்டாம் பாகம் வருகின்ற ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவித்திருந்தார் பாஜமாநிலத் தலைவர் அண்ணாமலை. அதன் அடிப்படையில் அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவை சேர்ந்த 21 நபர்களின் சொத்துப்பட்டியலை வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக இதுகுறித்து பேசிய அண்ணாமலை, “ பழனிவேல் தியாகராஜன் குறித்து 2022 ஐனவரியில் பேசிய முதலமைச்சர் 3 தலைமுறையாக தமிழக வளர்ச்சிக்கு அர்ப்பணித்த குடும்பம் அவர்கள் , தனது மொத்த திறமையையும் நிதித்துறைக்கு பயன்படுத்தி வருகிறார் என கூறினார். பிடிஆர் திராவிட மாடல் அரசின் பிராண்ட் அம்பாசடராக இருந்த அவரை மாற்ற காரணம் என்ன..? ஆடியோ பிரச்சனைக்காக அவரை மாற்றியது ஏற்க முடியாது. முதலமைச்சர் என் மீது இன்னொரு அவதூறு வழக்கு தொடர வேண்டும் , அதன் மூலம் அந்த ஆடியோ நீதிமன்றம் செல்லும், 1 மணி நேர முழு ஆடியோவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். பி.டி.ஆரை பகடைக்காயாக முதலமைச்சர் பயன்படுத்த கூடாது.
பிடிஆர் ஆடியோ பதிவை வெளியிட்டது முதலமைச்சர் பார்வையில் குற்றம்தான். எனவே இரண்டாவது வழக்கை என் மீது முதலமைச்சர் தொடர வேண்டும். என் மீது மொத்தமாக 1,461 கோடி இழப்பீடு கேட்டு திமுகவினர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்தியாவில் யார் மீதும் இந்த அளவு இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது இல்லை. பார்ட் 2 திமுக பைல்ஸ் ஜூலை மாதம் வெளியாகும் 21 நபர்கள் இடம் பெறுவர்” எனக்கூறியிருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அரசு தவறு செய்யவில்லை என்றால் வழக்கு ஏன் தொடரப்பட்டது என முதலமைச்சர் வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். ஆரூத்ரா மோசடி பணம் எந்த அமைச்சருக்கு சென்றது என DMK பைல்ஸ் 2 -வது பாகத்தில் உண்மை வெளியாகும். DMK பைல்ஸ் மூன்றாவது பாகமும் வெளியாகும்” எனவும் அண்ணாமலை கூறியிருப்பது அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது.