Annamalai ON BJP: பாஜக தலைவராக பொறுப்பேற்றார் அண்ணாமலை; ‛பாஜக தான் இனி தமிழ்நாட்டின் எதிர்காலம்’ என பேட்டி!
தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. இனி பாஜகதான் தமிழ்நாட்டின் எதிர்காலம் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஏழை, எளிய குடும்பங்களுக்கு நீட் வரப்பிரசாதமாக இருப்பதாகவும், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் அதிகம் பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக புதிய தலைவராக கே.அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டத்தை தொடர்ந்து, சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் அவர் இன்று பதவியேற்றுக்கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், “திமுக ஆட்சிக்கு வந்து 70 நாட்கள் ஆகியும் ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. எதற்காக நீட் தேர்வு வேண்டாம் என்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் போன்ற விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்கள், எல்.முருகனை போன்ற ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கும் நீட் தேர்வு வரப்பிரசாதமாக இருக்கிறது. மூலை முடுக்கெல்லாம் சென்று நீட் நல்லது என மக்களிடம் எடுத்து கூறுவோம்” என்று கூறினார்.
In the new media space, people run fake news, comment on leaders & misrepresent Centre's policies. It'll be controlled now as intermediaries have to declare the person running it, that's what I meant: Tamil Nadu BJP chief K Annamalai on his 'Will Control Media In 6 Months' remark pic.twitter.com/t9f1Vnzgjn
— ANI (@ANI) July 16, 2021
மேலும் அவர் பேசுகையில், “மத்திய அரசு தடுப்பூசி குறைவாக வழங்குகிறது என அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தமிழ்நாடு அரசு பொய் புகார் கூறியுள்ளது. எங்களுடைய கட்சி ஒரு வித்தியாசமான கட்சி. திருமணமாகாதவர்கள் 90 வயது வரை எங்கள் கட்சியை வழி நடத்தியுள்ளார்கள். ஒரு குடும்பம் ஒரு தலைவர் என மற்ற கட்சிகளைப் போல் கிடையாது பாஜக. கடைக்கோடியில் இருக்கும் ஒரு மனிதருக்கு பாஜக கொடுக்கும் அங்கீகாரம்தான் உண்மையான சமூக நீதி. கிராமத்தில் பிறந்த எல்.முருகனை இணை அமைச்சராக்கியதுதான் உண்மையான சமூக நீதி. தமிழ்நாடு மற்றும் இந்திய ஊடகங்களின் மீது பாஜக மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளது. ஐடி சட்டம் குறித்து நான் பேசியதை ஊடகங்கள் குறித்து பேசியதாக தவறாக சித்தரிக்கின்றனர். ஊடகங்கள் மீது பெரிய மதிப்பு உண்டு. தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. இனி பாஜகதான் தமிழ்நாட்டின் எதிர்காலம். தமிழ்நாட்டின் மூலை, முடுக்கெல்லாம் பாஜகவை கொண்டு செல்லவதே எங்களின் இலக்காகும். மத்திய அரசு தடுப்பூசி குறைவாக வழங்குகிறது என அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தமிழ்நாடு அரசு பொய் புகார் கூறியுள்ளது. கொங்கு நாடு விவகாரத்தில் குழப்பை இல்லை. உணர்ச்சிப்பூர்வமாக அரசியல் செய்வது பாஜக அல்ல” என்று கூறினார்.
பதவியேற்பு விழாவில், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர்ரெட்டி, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.