Abp Exclusive: உண்மையிலேயே ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டதா? திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் ஏபிபி-க்கு விளக்கம்..
உண்மையிலேயே சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டதா? என்பது குறித்து திருச்சி எம்.பி திருநாவுக்கரசரிடம் ஏபிபி சார்பில் தொடர்பு கொண்டு பேசினோம்.
ஜெயலலிதாவை அவமானப்படுத்தியதாக திமுக மீது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் ஆங்கில நாளிதழுக்கு விளக்கமளித்தார். அதில், “நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ் அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசுவார். ஜெயலலிதாவுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அது அவராக நடத்திக்கொண்ட நாடகம் என்பதை அப்போது அவையில் இருந்த அனைவரும் அறிவார்கள்.
இப்படி சட்டமன்றத்தில் செய்ய வேண்டும் என்று முன்னதாகவே தனது போயஸ் கார்டன் வீட்டில் வைத்து ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்றும், அப்போது நான் உடனிருந்தேன் என்றும் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு அவர்கள் (இப்போதைய திருச்சி காங்கிரஸ் எம்.பி) சட்டமன்றத்திலேயே பேசி அதுவும் அவைக் குறிப்பில் உள்ளது. எனவே தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது, அவையை தவறாக வழிநடத்துவது” என கூறினார்.
இந்த நிலையில், உண்மையிலேயே சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டதா? என்பது குறித்து முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், தற்போதைய திருச்சி எம்.பியுமான திருநாவுக்கரசரிடம் ஏபிபி சார்பில் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர் கூறியதாவது..
கேள்வி:
வணக்கம் சார், நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது,1989 ல் ஜெயலலிதாவின் சேலையை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இழுத்தார்கள் என்று கூறுகிறார். அப்போது, நீங்கள் அதிமுகவில் இருந்தீர்கள், அப்படி ஒரு சம்பவம் உண்மையில் நடந்ததா..?
திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் பதில்:
கடந்த 1989-ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் யார் என்றே தெரியாது. அரசியலில் இருந்தாரா இல்லையா என்பதும் தெரியாது. தமிழ்நாட்டில் நடந்த சம்பவங்கள் பற்றி அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். நிர்மலா சீதாராமன் ஊடகங்களில் சரியான செய்தியும் வழங்குவார்கள், பொய்யான செய்தியும் வழங்குவார்கள். இதில், ஏதோ ஒரு தவறான செய்தியை அறிந்துகொண்டு, ஜெயலலிதாவிடம் திமுகவினர் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
அந்த சம்பவம் நடந்தபோது முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்தார். அப்போது ஜெயலலிதா அவர்கள் எதிர்க்கட்சி தலைவராகவும், நான் (திருநாவுக்கரசர்) எதிர்க்கட்சி துணை தலைவராகவும் இருந்தோம். கே.கே.எஸ்.ஆர் சார் அவர்கள் அப்போது கொறடாவாக இருந்தார்.
அன்று எங்களது திட்டத்தின்படி, கலைஞர் கருணாநிதி முதல் பட்ஜெட்டினை படிக்கும்போது, (எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு, சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றும் முதலமைச்சர் ஆனார் கருணாநிதி) அந்த தகவல் அறிக்கையை பறிக்க அதிமுக சார்பில் செயல்படுத்த இருந்தோம். அதுதான் ஜெயலலிதா அவர்களின் விருப்பமும் கூட. யார் பட்ஜெட்டை பறிப்பது என்று ஏற்கனவே ஜெயலலிதா அவர்களின் வீட்டில் பேசிவிட்டுதான் சட்டசபைக்கே வந்திருந்தோம்.
நாங்கள் திட்டமிட்டிருந்தை முன்பே அறிந்துகொண்ட கலைஞர் கருணாநிதி பட்ஜெட்டை எழுந்து படிக்கும்போது, டேபிளுக்குமேல் ஒரு ஸ்டூல் வைத்து பேப்பரை இறுக பற்றி கொண்டார். அப்போது, ஒரு எம்.எல்.ஏ கலைஞர் கருணாநிதி கையில் வைத்திருந்த பேப்பரை முயற்சி செய்தார். இதை எதிர்பார்க்காத கலைஞர் ‘ஏய்.. ஏய்’ என்று கத்திக்கொண்டு திரும்பினார். அந்தநேரத்தில், கலைஞர் கருணாநிதியின் கண்ணாடி கழன்று விழுந்தது.
கலைஞரின் பின்னாடி இருந்த எம்.எல்.ஏக்கள், கலைஞர் முகத்தில் அடித்துவிட்டார்கள், குத்தி விட்டார்கள் என்று தவறாக எண்ணிக்கொண்டு, அருகிலிருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் ஜெயலலிதாவை அடிக்க பாய்ந்தனர். ஒன்று அல்லது இரண்டு அடிகள் என்மீதும், ஜெயலலிதா அவர்கள் மீதும் விழுந்தது. அப்போது நான்தான் அவற்றை தடுத்து ஜெயலலிதா அவர்களை அங்கிருந்து அழைத்து சென்றேன். மற்றபடி, அங்கு ஜெயலலிதாவின் சேலை இழுத்தோ, தாக்குதலோ நிகழவில்லை. ஜெயலலிதாவின் தலை மட்டும் கலைந்திருந்தது.
கேள்வி: உண்மையில் சேலை இழுக்கப்படவில்லை..?
ஜெயலலிதாவின் சேலை எல்லாம் பிடித்து யாரும் இழுக்கவில்லை.
கேள்வி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது..?
அவருக்கு என்ன தெரியும். மகாபாரத கதையோடு, இந்த கதையையும் இணைத்து பேசுகிறார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் பார்த்தாரா என்ன..? திமுகவை அட்டாக் செய்தவற்காகவே இப்படி சொல்கிறார்.தவறான தகவலை தெரிந்த மாதிரி சொல்வதும் தவறுதானே.
என்று ஏபிபி நாடு-விற்கு பதிலளித்தார்.