OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
ஓபிஎஸ் அணியிலிருந்து ஒவ்வொருவராக கழன்றுகொள்ளும் நிலையில், தனித்து விடப்பட்ட அவர், தவெகவில் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
செங்கோட்டையனைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான ஜேசிடி பிரபாகரன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்து பலரும் தவெகவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மெகா ட்விஸ்டாக ஓபிஎஸ்ஸே தவெகவில் இணைவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ்-ன் முக்கிய ஆதரவாளராக இருந்த ஜேசிடி பிரபாகர்
ஏற்கனவே தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன், இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் தவெகவில் இணைவார்கள் என்றும், அதுவும் பொங்கலுக்குள் பல மாற்றங்கள் நடக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதற்கு ஏற்றார் போல், ஓபிஎஸ்ஸின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவரான ஜேசிடி பிரபாகர் தற்போது தவெகவில் இணைந்துள்ளார். அவர், ஜெயலலிதா தலைமையிலான 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் எம்எல்ஏ-வாக பணியாற்றினார். தொடர்ந்து, ஜெயலலிதா மறைவுக்குப் பின், எடப்பாடி பழனிசாமியா, ஓபிஎஸ்ஸா என்ற நிலை வந்தபோது, ஓ. பன்னீர்செல்வம் அணியின் பக்கம் நின்றார் ஜேசிடி பிரபாகரன்.
பின்னர், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றப்பின், ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். அந்த வரிசையில் ஜேசிடி பிரபாகரும் நீக்கப்பட்டார். எனினும், அவர் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளராக தொடர்ந்தார்.
தவெகவில் இணைந்த ஜேசிடி பிரபாகரன்
இப்படிப்பட்ட சூழலில், முடிந்தவரை ஓபிஎஸ் பக்கம் இருந்து போராடிப் பார்த்த ஜேசிடி பிரபாகரன், இனி எந்த பயனும் இல்லை என்ற முடிவிற்கு வந்து, தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். சமீபத்தில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் எம்.பி., சத்யபாமா உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்.
தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்
முன்னதாக, ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்த அவரது தீவிர ஆதரவாளரான மனோஜ் பாண்டியன், திமுகவில் இணைந்து, ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சியளித்தார். அதைத் தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ-வான வைத்திலிங்கம் மாற்றுக் கட்சிக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ்ஸின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் துணை ஒருங்கிணைப்பாளராக உள்ள வைத்திலிங்கம், தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. வைத்திலிங்கம், 2001-2006 மற்றும் 2011- 2016 காலகட்டத்தில், ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். தற்போது அவர் ஒரத்தநாடு எம்எல்ஏ-வாக இருக்கிறார்.
தவெகவில் இணையும் ஓபிஎஸ்.?
மறுபுறம், அதிமுகவும் ஓ. பன்னீர்செல்வத்தை சேர்த்துக்கொள்ள மறுத்து வருகிறது. இதனால், அவர் தனித்து விடப்பட்டுள்ளார். அவரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், வேறு வழியில்லாமல் புதுரூட்டை கையில் எடுத்துள்ளதாகவும், அது, தானே தவெகவில் இணைந்து விஜய்யுடன் பயணிப்பது தான் என்றும் அதிரடி தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்த ஓபிஎஸ், தேர்தல் நெருங்கியும் அதற்கான எந்தவொரு முயற்சியையும் எடுக்காமல் தயக்கம் காட்டி வருகிறார். மேலும், அவரது அணியும் போகப்போக வீக்காக மாறத் தொடங்கியுள்ளது. எனவே, ஆளே இல்லாத கட்சியை ஆரம்பிப்பதைவிட, புதுக்கட்சி என்றாலும் செங்கோட்டையன் மீதுள்ள நம்பிக்கையில், விஜய்யுடன் பயணிக்க ஓபிஎஸ் முடிவெடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
அதன் முன்னோட்டமாகவே ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து ஓபிஎஸ் தவெகவிற்கு சென்றால், அரசியல் களம் மேலும் பரபரப்பாகிவிடும் இதனால், வரும் சட்டமன்ற தேர்தல், அரசியல் வரலாற்றில் மிகவும் சவாலான தேர்தலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















