SP Velumani: திமுகவின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை - ரெய்டு குறித்து எஸ்.பி.வேலுமணி கருத்து!
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய நிலையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி சோதனை தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
"திமுக அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையின் போது என் பக்கம் நின்ற அனைவருக்கும் நன்றி” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக எஸ்.பி.வேலுமணி தனது பேஸ்புக் பக்கத்தில், ‘அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையின் போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எனக்கு ஆதரவாக நின்ற கழக ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 810 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு செய்ததாக 2018 ம் ஆண்டில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 60 இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் ஒரே நேரத்தில் சோதனை செய்தனர். கோவை மாவட்டத்தில் எஸ்.பி. வேலுமணி இல்லம், அவரது சகோதரர் அன்பரசன் இல்லம் உள்ளிட்ட 42 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் நேற்று காலை 6.30 மணியளவில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையை துவக்கினர். 10 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்த அதிமுக தொண்டர்கள் எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன்பாக திரண்டர். நேரம் ஆக ஆக தொண்டர்களின் கூட்டம் அதிகரித்து வந்தது. 300 க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் திரண்டதால், 100 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.
வடவள்ளி பகுதியில் உள்ள கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் சந்திர பிரகாஷ் மற்றும் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதனிடையே நெஞ்சு வலி காரணமாக சந்திர பிரகாஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கேசிபி இன்ஜினியரிங் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய கோவையில் 42 இடங்களிலும், சென்னையில் 16 இடங்களிலும், காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் ஒரு இடத்திலும் நடத்தப்பட்ட சோதனையில் 13 லட்ச ரூபாய் பணம், ஆவணங்கள், பத்திரங்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.