‛ஆர்எஸ்எஸ் சிந்தனை நீதிபதிகள்...’ திக தலைவர் கி.வீரமணி சாடல்!
சமூக நீதியை, பாலியல் விவகார நீதியை தடுக்கும் செயல் இது. இதே நிலை தொடர்ந்தால் திராவிடர் கழகம் முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து, நீதித்துறை நெறிகெட்டு வளைந்ததை நிமிர்த்தி வைக்கும் முயற்சியில் ஈடுபடும்.
சமூக சீர்திருத்தவாதியாகவும் சாதி வேற்றுமையை அகற்றுவதற்காக பாடுபட்டவர்களில் ஒருவராகவும் மூட நம்பிக்கைகளிலிருந்து மக்களை விடுவிக்க போராடியவருமான தந்தை பெரியார் கடந்த 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்தார் என்பதும் அவர் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி தனது 94 வயதில் காலமானார். திராவிட கழகத்தை தோற்றுவித்தவர் என்ற பெருமை பெற்ற பெரியார், சுயமரியாதை, பகுத்தறிவு கொள்கையை கடைபிடித்து அதனை அனைவரிடமும் பரப்பி வந்தார். சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து குரல் கொடுத்தவர். கடவுள் நம்பிக்கை மற்றும் கடவுள் பெயரால் இருக்கும் மூட நம்பிக்கைகளை எதிர்த்தவர் பெரியார் என்பதும் தமிழ் சமூகத்திற்காக பல புரட்சிகரமான செயல்களைச் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய அரசியல் தலைவர்களுக்கு எல்லாம் அரசியல் குருவாக இருந்து வருபவர் பெரியார் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியாரின் 48வது நினைவு நாள் கருத்தரங்கம் மற்றும் நூல்வெளியீடு நிகழ்ச்சி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராவிட கழகம் தலைவர் கீ.வீரமணி, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,சட்டமன்ற உறுப்பினர் ஆளுர்ஷாநவாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதில் பேசிய திராவிட கழகத்தின் தலைவர், "திராவிடம் வெல்லும் அதை வரலாறு சொல்லும் இதை எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது. துறவி என்று சொல்லும் பொழுது நாம் சற்று யோசித்து சொல்ல வேண்டும் ஏனென்றால் நம் நிதியமைச்சர் கோவையில் உள்ள துறவியை தோலுரித்து காட்டியவர் பல ஆக்கிரமிப்புகளை வெளிகொண்டு வந்தவர். மத்தியில் இருக்க கூடிய விசித்திரமான சூழல் என்ன வென்றால் பிரதமர் இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பொழுது அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை வணங்கினார். அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்திற்கு அவ்வளவு மரியாதை தருகிறார் என்றால் அதில் எந்த சட்டத்தை பின்பற்றுகிறார் என்பது தான் என் கேள்வி. முதல்வர்களில் முதன்மையானவர் நம் முதல்வர் என்பதை ஆறு மாதத்தில் தற்போது நிரூபித்துள்ளார். பெரியாரின் போராட்டங்கள் எப்பொழுதும் உடனடி வெற்றியை தராது ஆனால் உரிய நேரத்தில் வெற்றி வந்தே தீரும்.நீட் தீர்மானம்,7 பேர் விடுதலை உள்ளிட்ட தமிழக அரசின் தீர்மானங்களை ராஜ்பவனில் உள்ள ஊறுகாய் ஜாடியில் ஊறிக்கொண்டு இருக்கிறது. இதை விட அரசியல் சட்டத்தை கொச்சை படுத்துபவர்கள் யார். பெரியார் என்ற ஆயுதம் என்றும் கூர்மையான ஆயுதம். இன்றைய ஆட்சிக்கு திராவிடர் கழகம் வாலாகவும் இருக்கும்,கேடையமாகவும் இருக்கும்." இவ்வாறு பேசினார்.
அதனை தொடர்ந்து சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவச் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திருவுருவப் படத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் கி .வீரமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், “உடலளவில் பெரியார் மறைந்தாலும் இன்றும் உணர்வால் பெரியார் மயக் கொள்கை இளைஞர்கள், மகளிர் ஒடுக்கப்பட்டோரால் பின்பற்றப்படுகிறது. பெரியார் உலகம் உருவாகி வருகிறது என்று சொல்லும் விதமாக பெரியாரியம் பரவியுள்ளது. இப்போதும் பெரியார் தேவைப்படுகிறார். தமிழகத்தில் சமூக நீதிக்கான சரித்திரி நாயகராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார், இந்தியளவில் முதன்மையான முதலமைச்சராக அவர் இருக்கிறார்.சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மற்றும் பெண் நிருபர்களை தவறாக பேசியவர்கள் மீதான வழக்குகளை, ஆர்எஸ்எஸ் சிந்தனையில் இருக்கும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து, அவர்களை விடுதலை செய்கின்றனர். சமூக நீதியை, பாலியல் விவகார நீதியை தடுக்கும் செயல் இது. இதே நிலை தொடர்ந்தால் திராவிடர் கழகம் முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து, நீதித்துறை நெறிகெட்டு வளைந்ததை நிமிர்த்தி வைக்கும் முயற்சியில் ஈடுபடும். நீதிக்கு விரோதமாக அவதூறுகளை அள்ளி வீசுவோரை விடுதலை செய்ய, கிளைக் கழகம்போல் சில நீதிபதிகள் நடப்பதை திராவிடர் கழகம் கண்டிக்கிறது. பெரியர் கருத்தில் ஒரு எழுத்தை மாற்றினாலும் பெரியாரை திரிபுவாதத்திற்கு ஆளாக்கி விடுவார்கள். பெரியார் எழுத்துகளை பயன்படுத்த அனுமதி கேட்போருக்கு வார்த்தை மாறாமல் பயன்படுத்த அனுமதித்து வருகிறோம். கண்டவர்களும் கண்ட இடத்தில் நுழைய முடியாது, நுழையவும் கூடாது” என்றார்.