Sikkim Assembly Election Results 2024: படுதோல்வியை சந்தித்த பாஜக.. காங்கிரஸை பின்னுக்கு தள்ளிய நோட்டா! சிக்கிம் சம்பவம்!
Sikkim Election Results: சிக்கிமில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ்-க்கு தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை தந்துள்ளன.
மக்களவை தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்ற கேள்விதான் தற்போது அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. மக்களவை தேர்தலுடன் ஒடிசா, ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டன.
இதில், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவை பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெற உள்ளதால் அதன் முடிவுகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு வருகின்றன. மக்களவை மற்றும் ஒடிசா, ஆந்திர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது.
சிக்கிமில் பாஜக படுதோல்வி: சிக்கிமை பொறுத்தவரையில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. பிரேம் சிங் தமாங் தலைமையிலான SKM 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், மேலும் 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் மொத்தம் 32 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அதில், ஒரு தொகுதியில் மட்டுமே ஆளும் SKM கட்சி வெற்றி வாய்ப்பை தவற விடும் சூழலில் உள்ளது.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக 31 தொகுதிகளிலும் போட்டியிட்ட போதிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. 12 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கும் தோல்வியை மிஞ்சி இருக்கிறது.
காங்கிரஸை பின்னுக்கு தள்ளிய நோட்டா: பொதுமக்களின் நிதியுதவியில் தேர்தலை சந்தித்த சிட்டிசன் ஆக்சன் கட்சியும் தோல்வியை சந்தித்துள்ளது. வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரையில், 58.29 சதவிகித வாக்குகளை ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா பெற்றுள்ளது.
சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு 27.41 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளது. பாஜகவுக்கு 5.19 சதவிகித வாக்குகளும் காங்கிரஸ் கட்சிக்கு 0.31 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன. இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. நோட்டாவுக்கு 0.99 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன.
சிக்கிம் புரட்சிகர முன்னணி என அழைக்கப்படும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிக்கிம் ஜனநாயக முன்னணியை சேர்ந்த பி.எஸ். கோலேதான், SKM கட்சியை தொடங்கியவர்.
சிக்கிம் ஜனநாயக முன்னணி அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த கோலே, தனது சொந்த கட்சியை சேர்ந்த தலைவரையே கடுமையாக எதிர்க்க தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக சிக்கிம் ஜனநாயக முன்னணி இருந்து விலகி SKM என்ற புதுக்கட்சியை தொடங்கினார்.