`ஹிட்லர் வம்சம்.. தலிபான்கள்!’ - ஆர்.எஸ்.எஸ், பாஜகவைக் கடுமையாகச் சாடியுள்ள சித்தராமையா!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா பாஜகவினரைக் கடுமையாக விமர்சித்துள்ள்ளார். பாஜகவினரைத் `தாலிபான்கள்’ என்று வர்ணித்துள்ள அவர், கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ் ஆட்சி நடத்தி வருவதாகத் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா கடந்த செப்டம்பர் 26 அன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவினரைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.பாரதிய ஜனதா கட்சியினரைத் `தலிபான்கள்’ என்று வர்ணித்துள்ள சித்தராமையா, கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ் ஆட்சி நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
`பாரதிய ஜனதா கட்சியிடம் பொய்களின் தொழிற்சாலையே இருக்கிறது. அவர்கள் வெறும் பொய்களை உற்பத்தி செய்து, பரப்பி வருகிறார்கள். ஹிட்லரின் ஆட்சியில் இருந்த கோயெபல்ஸ் கோட்பாட்டை இவர்களோடு நாம் பொருத்திக் கொள்ளலாம். ஹிட்லர் தன் அமைச்சரவையில் பொய்யான தகவல்களைப் பரப்புவதற்கென்றே கோயெபல்ஸ் என்ற அமைச்சரைப் பதவியில் வைத்திருந்தார்’ என்று கர்நாடகாவின் முன்னாள் முதல்வரான சித்தராமையா கூறியுள்ளார்.
`ஆர்.எஸ்.எஸ், பாஜக் ஆகியவை ஹிட்லரின் வம்சத்தில் இருந்து உருவானவை. பாஜக தாலிபான்களைப் போன்றவர்கள். அவர்களிடம் மிகுந்த கவனத்தோடு நடந்துகொள்ள வேண்டும்’ என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று காரணமாக குடும்பத்தில் நபர்களை இழந்துள்ளோருக்கு உணவு, நிவாரண நிதி முதலானவற்றை வழங்கும் நிகழ்ச்சியில் சித்தராமையா இவ்வாறு பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியைத் தனது அப்பாவும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வருமான ஆர்.குண்டுராவின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ தினேஷ் குண்டுராவ் ஏற்பாடு செய்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி எப்போது மக்களின் ஆசியைப் பெறாமல், பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வருவதாக விமர்சித்துள்ள சித்தராமையா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா `ஆபரேஷன் கமலா’ என்ற பெயரில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சிக்கு வந்துள்ளதாகவும், தற்போது அவரையே முதல்வர் பதவியில் இருந்து விலக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
`தற்போது பசவராஜ் பொம்மை கர்நாடக முதல்வராகப் பதவியில் இருக்கிறார். இவரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முதல்வராக்கியுள்ளது. எனவே வேறு வழியின்றி, எடியூரப்பா இதற்கு ஒப்புதல் தர வேண்டும். பாஜக என்ற முகமூடியை அணிந்துகொண்டு, கர்நாடகாவின் நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தி வருகிறது’ என்று கூறிய சித்தராமையா, பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகளின் அலுவலகங்களில் பல ஆண்டுகளாக மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோரின் படங்கள் வைக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். `தற்போது இந்தத் தேசிய தலைவர்களைப் பின்பற்றுவதாக நாடகம் ஆடுகின்றனர்’ என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
`பாஜகவினர் பொய் சொல்வதில் முகவும் தேர்ந்தவர்கள். நரேந்திர மோடி `சப்கா சாத் சப்கா விகாஸ்’ (அனைவரும் சேர்ந்து.. அனைவருக்கான முன்னேற்றம்) என்கிறார். ஆனால் அவருடைய அமைச்சரவையில் ஒரு கிறித்துவரோ, ஒரு முஸ்லிமோ இடம்பெற்றிருக்கிறார்களா? அவர்கள் எப்படி நாடகம் ஆடுகிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள்!’ என்று கூறியுள்ள சித்தராமையா, பிரதமர் மோடி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, அதனை நிறைவேற்றவில்லை என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.